’புகைப்பழக்கத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியூசிலாந்தைவிட இந்தியாவுக்குத்தான் அதிகம் தேவை’ என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வருங்கால தலைமுறையினர் புகையிலை பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நேற்று (டிசம்பர் 13) நிறைவேற்றியுள்ளது நியூசிலாந்து அரசு.
இச்சட்டத்தின் படி 2009 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த யாருக்கும் சிகரெட் விற்கக்கூடாது.
ஆனால் சட்டத்தையும் மீறி விற்பனை செய்தால் 95,910 டாலர் (இந்திய மதிப்பில் 79,12,546.20) அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சட்டத்தின்படி 2009 ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்த இளைஞர்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நம் மின்னம்பலத்தில் இன்று (டிசம்பர் 14), ’சிகரெட்டிற்கு வாழ்நாள் தடை: மீறினால் அபராதம்’ என கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இதை வரவேற்றிருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இச்சட்டம் இந்தியாவுக்கு அதிகம் தேவை என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று தன்னுடைய ட்விட்டர் பதிவில்,
’நியூசிலாந்தில் 2009ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
உலகில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடு நியூசிலாந்துதான். நியூசிலாந்து நாட்டின் சட்டத்தால் புகைப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு குறையும். 2050ஆம் ஆண்டில் 40 வயதானவர்களால்கூட புகைக்க முடியாது.
2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நியூசிலாந்தில் சிகரெட் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தில் இருந்து 600 ஆக குறைக்கப்படும்.
புகைப்பிடிப்போர் எண்ணிக்கை குறைவதால், நியூசிலாந்து மக்களின் மருத்துவத்துக்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி (5 பில்லியன் டாலர்) குறையும்.
ஒரு சட்டத்தால் இவற்றைவிட பெரிய நன்மையை ஒரு நாட்டுக்கு செய்து விடமுடியாது. அதனால்தான் இது வரலாற்று சிறப்புமிக்க சட்டம். புகைப்பழக்கத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியூசிலாந்தைவிட இந்தியாவுக்குத்தான் அதிகம் தேவை.
எனவே, இந்தியாவில் புகைபிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்தவேண்டும்.
2001ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
தென்பெண்ணையாறு நீர் பங்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு அவகாசம்!
டெல்லி எய்ம்ஸ் ஹேக்கர்: சீனாவின் சதியை முறியடித்த மத்திய அரசு!