தேமுதிக நிறுவன தலைவரான விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்திப்பார். தன் கையாலேயே முக்கிய நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.
இந்த வருடம் ஜனவரி 1 புத்தாண்டை முன்னிட்டு விஜயகாந்த் கட்சித் தொண்டர்களை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைத்து சந்திப்பார் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படியே ‘கேப்டனை பார்க்கணும்’ என்ற ஆர்வத்தில் இன்று காலையில் இருந்தே ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கோயம்பேட்டில் கூடினார்கள்.
சில வருடங்களாகவே விஜயகாந்தின் உடல் நலம் சரியில்லாததால் அவரால் இயல்பான அரசியல் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அவரது கால் விரல்களில் சிலவற்றை அகற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இதனால் அவர் பெரும்பாலும் பொது வெளியில் வருவதே இல்லை.
இதனால்தான் விஜயகாந்தை பார்க்க கட்சித் தொண்டர்கள் பெரும் ஆர்வமாக இருந்தனர். இன்று பகல் 12 மணியளவில் தேமுதிக அலுவலகத்தில் முகப்புப் பகுதியில் பிரத்யேக நகரும் சோபாவில் அமர்ந்திருந்தார் விஜயகாந்த்.
வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டையில் முகக் கவசத்தோடு காட்சியளித்தார் விஜயகாந்த். உடல் மிகவும் இளைத்துக் காணப்பட்டார் விஜயகாந்த்.
தொண்டர்கள் யாரும் விஜயகாந்தை நெருங்கி அவருக்கு தொந்தரவு ஆகிவிடக் கூடாது என்பதற்காக கம்புகள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
விஜயகாந்தைப் பார்த்ததும், ‘கேப்டன் வாழ்க கேப்டன் வாழ்க’ என்று பெருங்குரலெடுத்து உணர்ச்சிக் குவியலாய் கண்ணீர் மல்க கோஷமிட்டார்கள் தொண்டர்கள்.
இரு கைகளையும் தூக்க முடியாமல் தூக்கி அவர்களின் வாழ்த்தை ஏற்றுக் கொள்ள முயன்ற விஜயகாந்தால் கைகளை சில நிமிடங்கள் கூட தொடர்ச்சியாக உயர்த்திக் காட்ட முடியவில்லை.
அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் இரு பக்கமும் நின்று விஜயகாந்தை பார்த்துக் கொண்டனர்.
பத்து நிமிடம் தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றுக் கொண்ட விஜயகாந்தை அவர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர்.
விஜயகாந்த் பார்க்கும்போதே தொண்டர்களிடம் மைக் பிடித்து பேசிய பிரேமலதா, ‘இந்த வருடம் தேமுதிகவுக்கு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்’ என்று பேசினார்.
தொண்டர்கள் கேப்டன் வாழ்க கேப்டன் வாழ்க என்று கோஷமிட்டுக் கொண்டிருந்ததால் அவர் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
பிறகு வரிசையாக தொண்டர்கள் அனைவரையும் வரச் சொல்லி ஆளுக்கு நூறு ரூபாய் வழங்கினார் பிரேமலதா.
தொண்டர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் பிரேமலதாவிடம் நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றனர்.
–வேந்தன்
டாப் டிரெண்டிங்கில் துணிவு டிரெய்லர்!