2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.
2025ஆம் ஆண்டை தங்களுக்கு பிடித்த வகையில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அனைவருக்கும் நன்மைகள், மகிழ்ச்சி, முன்னேற்றம், வெற்றி ஆகியவற்றை தரும் ஆண்டாக அமைய வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
குடியரசுத் தலைவர்
2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். இந்த நேரத்தில் நாம், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒரு பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்.
பிரதமர் மோடி
2025ஆம் ஆண்டு மகிழ்ச்சியாய் அமைய வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், அளவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படட்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
2025ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தையும், புதிய மகிழ்ச்சியையும் தரும் என்று நம்புகிறேன்.
ஆளுநர் ரவி
2025 ஆம் ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும். சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம்.
முதல்வர் ஸ்டாலின்
இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்ட 2024 நிறைவுற்று, புத்தாண்டு 2025 பிறக்கிறது.2024 ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் தொடர் சாதனைப் பயணம் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்தச் சாதனைகளை உச்சிமுகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் கூறும் விதமாகத்தான் 2024 லோக்சபா தேர்தலில் ‘நாற்பதுக்கு நாற்பது’ என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றி மகுடம் சூட்டினர் நம் மக்கள்.
தமிழ்நாடும். புதுச்சேரியும் அளித்த அந்த மாபெரும் வெற்றிதான் இந்தியாவில் மதச்சார்பின்மைக்கான குரல் இன்னும் உயிர்ப்போடு ஒலித்துக் கொண்டிருக்க- தொடர்ந்து நிலைத்து நிற்க மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து- இந்நாட்டின் பெருமையை நிலைநாட்ட, தமிழக மக்கள் அளித்த வெற்றிக்குரிய 2024-ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது. சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும். வெற்றி பெறவுமான நம்பிக்கையினையும் உத்வேகத்தினையும் அளித்தது 2024-ஆம் ஆண்டு! புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கட்டும். தமிழக அரசிற்கு வழிகாட்டும். அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும்,வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
2025-ஆம் ஆண்டு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இரு குறள்களின் வாயிலாக விளக்க விரும்புகிறேன். திருக்குறளின் 551-ஆம் குறள்,‘‘கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து’’ என்பதாகும். கொடுங்கோன்மை என்ற அதிகாரத்தில் வரும் இந்தக் குறளுக்கு கலைஞர் எழுதிய உரை,‘‘அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்’’ என்பதாகும். தமிழ்நாட்டில் இப்போது நிலவும் கொலைத் தொழில் ஆட்சி அகற்றப்படுவதற்கு 2025ஆம் ஆண்டு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும்.
2026-ஆம் ஆண்டு.‘‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி’’(குறள்:542. பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; மக்களோ மன்னரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்) என்ற செங்கோன்மை அதிகாரத்தின் குறளைப் போன்ற ஆட்சி அமைய வேண்டும்.
நாம் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
வரும் 2025 ஆம் ஆண்டு, தமிழகத்தைப் பீடித்துள்ள தீமை அகன்று வெளிச்சம் பிறந்திடவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகிடவும், நல் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் ஆண்டாக அமைந்திடவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும், எண்ணங்களிலும் புதிய நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் விதைத்திடும் வகையில் பிறக்கும் இப்புத்தாண்டு, மக்களை அனைத்து வழிகளிலும் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் தீமைகளை விரட்டி, புதிய வெளிச்சத்தை பாய்ச்சும் ஆண்டாக அமைய வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
உதயமாகும் புத்தாண்டு நிறைவான வளத்தையும், குறையாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஆண்டாக மட்டுமின்றி மனிதநேயமும், மதநல்லிணக்கமும் தழைத்தோங்கும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தவெக தலைவர் விஜய்
மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள். மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை. சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
புத்தாண்டில் ஷாக் தந்த தங்கம் விலை!
மெல்பர்னில் டிராவிஸ் ஹெட் செய்தது என்ன? சித்து காட்டமான பின்னணி!