New Visions of Congress Party Manifesto

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் புதிய தரிசனங்கள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

அகில இந்திய காங்கிரஸ்தான் இந்தியாவின் நவீன மக்களாட்சிக்கான முதல் விதை. அது விதைக்கப்பட்டு நூற்று நாற்பதாண்டுகள் ஆகின்றது. இந்தியாவின் பல்வேறு அரசியல் தரப்பினரும் முதலில் அதில்தான் அரசியலில் நுழைந்தார்கள் என்பதை நாம் காண முடியும். தமிழ்நாட்டிலும் திராவிட பேராசான் பெரியார் உள்ளிட்ட பல தலைவர்கள் முதலில் காங்கிரஸில்தான் தங்கள் பயணத்தைத் தொடங்கினர் என்பது நாமறிந்ததே.

காங்கிரஸ் காலத்துக்கேற்ப இந்தியாவின் அரசியலைத் தொடர்ந்து பல திசைகளில் செலுத்தி வந்துள்ளது. அது செய்த பல அரசியல் தவறுகளையும் காலப்போக்கில் திருத்திக் கொண்டு மீண்டு வந்துள்ளது. ஏனெனில் காந்தி, நேரு உள்ளிட்ட உலக நாடுகள் வியக்கும் பல தரிசனமிக்க தலைவர்களால் செலுத்தப்பட்ட இயக்கம் அது. அதே சமயம் அது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய இயக்கமாகவும் இருந்ததால், அந்தக் கட்சிக்குள்ளேயே நிலவுடைமை சிந்தனை கொண்டவர்கள், சுதந்திர சந்தைப் பொருளாதார ஆதரவாளர்கள், ஹிந்தி மொழியை தேசிய மொழியாக்க விரும்பியவர்கள் என பலரும் இருந்தார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம், சாமானியர்களின் மகத்தான அரசியல் இயக்கமாக மலர்ந்தபோது அது காங்கிரஸின் ஒரு சில பிரிவினர் முன்னெடுத்த சிந்தனைகளை எதிர்த்தே இயங்கினாலும், தேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸுடன் இணைந்து நிற்கவும் மறுத்ததில்லை. குறிப்பாக காங்கிரஸின் சோசலிச, முற்போக்கு திட்டங்களை தி.மு.க முன்னின்று ஆதரித்து வந்துள்ளது. இந்திரா காந்தி வங்கிகளை தேசிய மயமாக்குவதற்கு பல ஆண்டுகள் முன்பே 1962ஆம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க வங்கிகளை தேசியமயமாக்க குரல் கொடுத்தது.

அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் இன்று தி.மு.க-வின் தரிசனமிக்க தேர்தல் அறிக்கையினை உள்ளெடுத்துக்கொண்ட தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் கட்சி அறிக்கை உருவாகியுள்ளது. பக்கத்திற்கு பக்கம் அருமையான சிந்தனைகளையும், அற்புதமான தரிசனங்களையும் உள்ளடக்கி உள்ளது. அவற்றில் ஒரு சில முக்கிய அம்சங்களை அலசிப் பார்ப்பது தெளிவைத் தரும்.

சமூக நீதி என்ற அடிப்படை

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து அதன் நீண்ட கால ஜாதீய சமூக ஏற்றத்தாழ்வுகளை எப்படிக் களைவது என்பது முக்கிய கேள்வியாக இருந்து வந்துள்ளது. அரசியல் சொல்லாடலில் இந்திய மக்கள் தொகையை 85% பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது தலித் பகுஜன் என்றும், 15% பேர் முன்னேறிய வகுப்பினர் என்றும் பிரிப்பது வழக்கம். பண்டைய வர்ண சமூகத்தில் கல்வி கற்பது முன்னேறிய வகுப்பினருக்கு உரியதாக இருந்ததால், நவீன சமூகம் உருவானபோது அவர்களே பெரும்பாலும் கல்வி பயின்று பல்வேறு செல்வாக்கான பதவிகளிலும் அமர்ந்தார்கள்.

இப்படி பழைய வர்ண அடுக்குமுறை தொடர்வது மக்களாட்சி விழுமியங்களுக்கு எதிரானது என்பதால், சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தருவது என்பது அவசியமாயிற்று. பல்வேறு தடங்கல்கள், தர்க்கங்களுக்குப் பிறகு பல தளங்களில் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. பட்டியல் ஜாதிகள், பட்டியலின பழங்குடிகளுக்கு ஒன்றிய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டிலும் இட ஒதுக்கீடு தரப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு முதலில் மாநில அரசு மற்றும் நிறுவனங்களில் மட்டுமே வழங்கப்பட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் 1989ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பிறகுதான் ஒன்றிய அரசு மற்றும் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இவ்வாறான இட ஒதுக்கீடுகள் இருந்தாலும் கூட செல்வாக்கான, அதிகாரமிக்க பதவிகளில், தொழில்களில் 85% மக்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையைச் சீர்செய்ய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியைச் சேர்க்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது. ஏனெனில், துல்லியமாக ஜாதீய சமூகங்களின் எண்ணிக்கை தெரிந்தால்தான், எந்தெந்த சமூகங்கள் அதிகம் பின் தங்கியுள்ளன என்பதை அறிந்து, அதற்கேற்றவாறு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

இதனை மனதில் கொண்டுதான் காங்கிரஸ் கட்சி ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நட த்துவதாக உறுதிமொழி கொடுத்துள்ளது. அத்துடன் சமூக, பொருளாதார நிலை குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பு உதவாது என்பதால் அந்த உச்சவரம்பை தக்க சட்டத்தின் மூலம் தேவையான அளவு தளர்த்துவதாகவும் கூறியுள்ளது மிக முக்கியமான முன்னெடுப்பாகும்.

ஜாதீய படி நிலை அமைப்பின்படியே தொடர்ந்து சமூக இயக்கம் அமைவதை அவசியம் மாற்றியமைக்க வேண்டும். இல்லாவிட்டால் சுதந்திரமான மக்களாட்சி என்பதற்கு பொருளே இல்லை. அதற்கு, உள்ளபடி ஜாதிகளை கணக்கெடுத்து, பின் தங்கிய நிலையை அளவிட்டால் தக்க நடவடிக்கைகள் மூலம் சமூக நீதியை நிறுவ முடியும் என்பது வெளிப்படை. காங்கிரஸ் தனது அறிக்கையின் முதல் அம்சமாக இதனை அறுதியிட்டுக் கூறியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

அது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு என்பது முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமானதாக இல்லாமல் அனைத்து சமூகப் பிரிவுகளிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று மாற்றுவதாக அறிவித்துள்ளது மிக முக்கியமான ஒரு சீர்திருத்தம் எனலாம். இதன்மூலம் பொருளாதார நலிவு என்ற போர்வையில் முன்னேறிய வகுப்பினர் மட்டும் மீண்டும் சலுகை பெற வழிவகுப்பது தவிர்க்கப்படும். சமூக ரீதியான ஏற்றத்தாழ்வையும், பொருளாதார நலிவையும் சமப்படுத்தும் போக்கு தவிர்க்கப்படும்.

பொருளாதார நீதி  

மற்றொரு புரட்சிகரமான திட்டம் மஹாலஷ்மி என்ற பெயரிலான திட்டமாகும். இது என்னவென்றால் வறுமையில் வாடும் அடித்தட்டு குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உத்தரவாதம் செய்யும் திட்டம். அந்தக் குடும்பங்களிலுள்ள வயதில் மூத்த பெண்ணுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நேரடியாக அரசால் வழங்கப்படும். அப்படி பெண்களே இல்லாத குடும்பம் இருந்தால் மூத்த ஆணுக்கு வழங்கப்படும்.

உலக பொருளாதார சிந்தனையில் உருவாகியுள்ள புதிய தத்துவம் இது எனலாம். தாமஸ் பிக்கெட்டி போன்றவர்கள் எல்லா நாடுகளிலும் சொத்திலும், வருமானத்திலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதை ஏராளமான புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனடிப்படையில்தான் வருவாய் பிரமிடின் அடிப்பரப்பிலுள்ள குடும்பங்களுக்கு நிவாரணமாக இந்தத் திட்டம் அறிவிக்கப்படுகிறது.

பொதுவாக பழைய பொருளாதார சிந்தனையில் உற்பத்தி பெருகுவதன் மூலம் வேலை வாய்ப்புகள் பல தளங்களிலும் அதிகரிக்கும் என்றும், அதனால் வருவாய் என்பது கீழ்மட்டத்துக்கு தண்ணீர் வடிவது போல சென்றுவிடும் என்றும் கூறுவார்கள். பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன்பிடிக்க சொல்லிக்கொடுப்பதே முக்கியம் என்று கிளிப்பிள்ளைகள் போல சொல்வார்கள்.

இதில் என்ன சிக்கலென்றால் உற்பத்தி இயந்திரமயமாகி விட்டதால், வேலை வாய்ப்பு என்பது வெகுவாகக் குறைகிறது. ஆட்களே இல்லாமல் இயந்திரங்கள், கணினி மூலம் பெருமளவு வேலைகளை செய்ய முடிகிறது. அதனால் உற்பத்தி பெருக்கத்தின் மூலம் வருவாய் சமூகத்தின் அடிப்பரப்பிற்கு செல்வதில்லை. ஏற்றத்தாழ்வு அதிகமாவதுடன், மக்களுக்கு வாங்கும் சக்தி இல்லாததால் பொருளாதார மந்த நிலையும் தோன்றக் காரணமாகிறது. இதற்குத் தீர்வாகத்தான் நேரடியாக வருவாய் பங்கீடு செய்வதன் மூலம், அனைத்து குடும்பங்களுக்கும் குறைந்த பட்ச வருவாயை உத்தரவாதம் செய்வது என்ற சிந்தனை உருவாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி இந்தத் திட்டத்தை அறிவித்திருப்பது பொருளாதார திட்டமிடுதலில் ஒரு முக்கிய திருப்பமாகும். ஏற்கனவே குறைவான வருமானமுள்ள குடும்பப் பெண்களுக்கு தி.மு.க அரசு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறது. அதனைப் பின்பற்றி பல மாநில அரசுகளும் தருகின்றன. ஒன்றிய அரசு மிகவும் வறிய குடும்பங்களை அடையாளம் கண்டு வருடம் ஒரு லட்ச ரூபாய் தருவது என்பது மிகப்பெரிய சமூகப் பொருளாதார தரிசனமாகும்.

கூட்டாட்சி நீதி

மக்களாட்சியின் ஆதார விசையாகிய அதிகாரப் பரவலில் கூட்டாட்சி தத்துவம் மிக முக்கியமானதாகும். “ஒரே நாடு” என்ற கோஷத்தின் மூலம் ஒன்றிய அரசிடம், அதன் பிரதமரிடம் அதிகாரத்தைக் குவிப்பது என்பது எதேச்சதிகாரத்திற்கே இட்டுச் செல்லும். இந்தியா போன்ற அளப்பரிய கலாசாரப் பன்மை கொண்டு, பன்மை வரலாற்றுச் சுவடுகளைக் கொண்ட மக்கள் தொகுதிகளுக்கு போதுமான சுயாட்சி உரிமைகள் இருந்தால்தான் ஒற்றுமை என்பது சாத்தியமாகும்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இதை முழுமையாக ஏற்று முன்மொழிகிறது. ஒன்றிய அரசின் வசமுள்ள பல அதிகாரங்களை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பதாகக் கூறுகிறது. திடீரென மாநில அரசு அந்தஸ்து பறிக்கப்பட்ட ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு உடனடியாக மாநில அரசு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதி கூறுகிறது.

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை சீர்செய்வதாக உறுதியளிக்கிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி பொருளாதார முன்னேற்றத்தை சாதிக்கும் மாநிலங்கள் அதற்கான பலனைப் பெறுவதும், அத்தகைய சாதனைகளுக்காக குறைவான நிதி ஒதுக்கீட்டின் மூலம் தண்டிக்கப்படாமல் இருப்பதும் அவசியமாகும். காங்கிரஸ் இந்த நிலையை சீர்செய்வதாக கூறியுள்ளது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது.

மாநிலங்களுக்கு மட்டுமன்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரப் பரவல் சென்றடைவதை உறுதிசெய்வதாக அறிக்கை கூறுகிறது. இதுவும் முற்போக்கான சிந்தனையாகும். மாநிலங்களுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும்போது இயல்பாகவே அது உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் சென்று சேரும்.

தமிழ்நாட்டு மக்களை பெருமளவு பாதித்த மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை மாநிலங்களின் முடிவுக்கே விட்டுவிடுவதாக காங்கிரஸ் வாக்களித்துள்ளது. அரியலூர் அனிதாவின் பெயரால் இந்த முடிவினை முழுமையாக தமிழ் மக்கள் வரவேற்பார்கள். எல்லோருக்கும் ஒரே அளவிலான சட்டை என்பது அபத்தமாகும். அவரவர் தேவைக்கேற்பத்தான் இது போன்ற நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்பது தெளிவு.

அறிக்கையின் சிறப்பும், பாஜக எதிர்வினையும்

மேற்கூறிய சிறப்பம்சங்கள் மட்டுமன்றி, பக்கத்திற்குப் பக்கம் பல நுட்பமான சிறப்பான திட்டங்களை அடுக்கியுள்ளது காங்கிரஸ் அறிக்கை. ஒரு பொற்காலத்திற்கு கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி அரசியல் ரீதியாக இதை எதிர்ப்பது இயல்பானதுதான். ஆனால், இதைவிட சிறப்பான ஓர் அறிக்கையை தயாரிப்பதே முக்கியமானதாகும். அதற்குப் பதில் காங்கிரஸ் அறிக்கையை முஸ்லிம் லீக்குடன் அடையாளப்படுத்துவதும், நாட்டை பின்னோக்கிச் சென்றுவிடும் என்று கூறுவதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

காங்கிரஸின் அணுகுமுறையில் ஒப்புதல் இல்லாவிட்டாலும் பாஜக இதே அம்சங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை அதன் அறிக்கையில் தெளிவாக்க வேண்டும். அதற்குப் பதில் வெளியிடப்பட்ட அறிக்கையை ஏசுவது முதிர்ச்சியானதல்ல. குறிப்பாக பாஜக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வறிய குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை நேரடியாக அளித்தல், கூட்டாட்சி முறையில் மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு ஆகியன போன்ற அம்சங்களில் என்ன கொள்கை வைத்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

எதனால் பாஜக-வின் கொள்கைகள் இந்த அம்சங்களில் காங்கிரஸைவிட சிறந்தது என்பதை மக்களிடம் விளக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் இந்த மாறுபட்ட கருத்தியல்களை ஒப்பிட்டு வாக்களிக்க முடியும். அதற்குப் பதில் பொத்தாம்பொதுவாக காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைச் சாடுவது நல்லதொரு மக்களாட்சிக் களத்தை உருவாக்காது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு:

New Visions of Congress Party 2024 Elections Manifesto by Rajan Kurai Article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

LSGvsGT : தொடர்ந்து 3வது வெற்றி… யாஷ் பந்துவீச்சில் சுருண்டது குஜராத் அணி!

2வது இடம் வந்துட்டேன் பாத்தியா? : அப்டேட் குமாரு

அதே சத்தம்… மஞ்சும்மல் பாய்ஸை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி… பெருமூச்சு விட்ட ஹர்திக் பாண்டியா

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *