மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் அறிவித்த புதிய திட்டம்!

அரசியல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் 1000 ரூபாயில் 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

உலக மாற்றுத்திறனாளிகள் நாள் விழா இன்று(டிசம்பர் 3) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய முதலமைச்சர்,

“மாற்றுத்திறனாளிகள் துறையை நான் என் பொறுப்பிலே வைத்திருக்கிறேன் என்பதை அனைவரும் அறிவீர்கள்.  இதன்மூலமாக மாற்றுத்திறனாளிகள் மீது நாங்கள் வைத்திருக்கும் உண்மையான அக்கறையை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.

பிறவியில் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும், பின்னர் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும், விபத்தின் காரணமாக ஏற்பட்ட நிலையாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களை சிறப்பு கவனம் செலுத்தி கவனிக்கவேண்டும்.

அவர்களது உடல் குறைபாடானது. ஆனால் உள்ளம், அறிவு குறைபாடானது அல்ல. திறன் குறைபாடானது அல்ல என்பதை உணர்ந்து அவர்களை மதிக்கவேண்டும்.

சமூகத்தில் மற்ற தரப்பினர்  பெற்றிடக்கூடிய வசதி, வாய்ப்புகளை மாற்றுத்திறனாளிகளும் பெற்றிடவேண்டும்.

சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் கால் நனைக்க உருவாக்கிய பாதைதான் அந்த அன்புப்பாதை. தடைகளை வென்று சாதனைப்படைத்தவர்கள் பலர். இன்றைய நாளில் அதுபோன்ற பலர் நமது தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள்ளே முடங்கிவிடக்கூடிய காலம் இருந்தது. இப்போது அதைத்தாண்டி பொதுவெளியில் போராடி முன்னேறத் தொடங்கியிருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களை கண்டறிந்து வேலைவாய்ப்பினை வழங்க, வல்லுநர் குழு மற்றும் உயர்மட்டக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் இருந்தே பணி செய்யும் சூழலை உருவாக்கப்போகிறோம்.

அதற்கு சான்றாகத்தான் நான் முதல்வன் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலம் மடிக்கணிணியோடு கூடிய திறன்பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய புதிய முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது.

உலக மாற்றுத்திறனாளிகள் நாளான இன்று ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும்.

இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 263 கோடியே 58 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆடுகளை மேய்ப்பவர் ஒரே ஒரு ஆட்டை தனது தோளில் தூக்கி சுமந்து வருகிறார் என்றால் அந்த ஆடு நடக்க முடியாமல் இருக்கும். இதுதான் சமூக நீதி என்று எளிமையான விளக்கத்தை சொன்னவர் கலைஞர்.

அத்தகைய சமூக நீதியின் சிந்தனையில் அமைந்திருக்கும் இந்த அரசு, எப்போதும் எந்த சூழலிலும் அனைத்து மக்களின் அரசாக இருக்கும். குறிப்பாக விளிம்புநிலையில் இருக்கும் மக்களின் அரசாக இருக்கும்.

அவர்களுக்காகவே திட்டமிடும் அரசாக இருக்கும். அவர்களில் ஒருவராக இருந்து அவர்களின் தேவைகளைத் தீர்க்கும் அரசாக இருக்கும் என்று பேசினார்.

கலை.ரா

எடப்பாடி வழக்கு: அறப்போர் இயக்கம் மேல்முறையீடு!

குஜராத் 2ம் கட்ட தேர்தல்: இன்றுடன் பிரசாரம் நிறைவு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.