டிஜிட்டல் திண்ணை: சட்டமன்றத்தில் வேலுமணிக்கு புது பதவி?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சட்டமன்ற நேரலை காட்சிகள் வீடியோக்களாக வந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.

“தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் எதிர்வரும் மக்களவைத் தேர்தல், அடுத்து வருகிற சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றைப் பற்றி வியூகம் வகிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் சட்டமன்றத்திலேயே வரும் வாரம் ஒரு தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 10 தேதி ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த தேர்தல் பற்றிய பேச்சுகள் அமுங்கி போய்விட்டன.

அது என்ன தேர்தல் என்றால் சட்டமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பேரவை குழுக்களின் தேர்தல் தான். மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்கு குழு, பொது நிறுவனங்கள் குழு, உரிமை குழு ஆகிய குழுக்களுக்காக ஏப்ரல் 17ஆம் தேதி பிற்பகல் வரை சட்டமன்ற செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்பு தாள்களை தாக்கல் செய்யலாம் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். ஏப்ரல் 18ஆம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் ஏப்ரல் 19ஆம் தேதி மனுக்களை திரும்ப பெறலாம் என்றும்… குழுவின் எண்ணிக்கையை விட அதிகமாக வேட்பு தாள்கள் பெறப்பட்டால் அதன் பிறகு தேர்தல் முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்த குழுக்களிலே பொதுக் கணக்கு குழு முக்கியமானது. அரசின் திட்டங்களை கண்காணிக்க கூடியது. இப்போது இதன் தலைவராக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரான செல்வப் பெருந்தகை இருக்கிறார். 2021 இல் திமுக ஆட்சி அமைந்த போது பொது கணக்கு குழு தலைவராக செல்வப் பெருந்தகை தேர்வு செய்யப்பட்டார். ஒரு வருடம்  இந்தக் குழுவின் பதவிக்காலம் என்ற நிலையில் கடந்த 2022-23 ஆம் ஆண்டுக்கான பொது கணக்கு குழு தேர்தல் நடத்தப்படாமல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2023 24 ஆம் ஆண்டுக்கான குழுக்களுக்கான தேர்வு பற்றி சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த முறையும் பொது கணக்கு குழுவின் தலைவராக செல்வப் பெருந்தகையே நீடிப்பாரா அல்லது இந்த முறை பொது கணக்கு குழுவின் தலைவர் பதவி அதிமுகவுக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ளது.

பொதுவாக பொதுக் கணக்கு குழுவின் தலைவராக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தான் இருப்பார். 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கிட்டத்தட்ட நூறு உறுப்பினர்களை கொண்டு வலிமையான எதிர்க்கட்சியாக திமுக இருந்த போதும் பொது கணக்கு குழு தலைவர் பதவியை அப்போதைய சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராமசாமிக்கு கொடுத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு பொது கணக்கு குழு தலைவர் பதவியை அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த துரைமுருகனுக்கு அளித்தார் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி. 

இப்போது அதே வகையில் பொது கணக்கு குழு தலைவர் பதவியை அதிமுகவுக்கு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஒருவேளை அதிமுக தரப்பின் கோரிக்கை ஏற்கப்பட்டால் பொது கணக்கு குழு தலைவராக தற்போதைய அதிமுக கொரடாவும் முன்னால் அமைச்சருமான வேலுமணியை பரிந்துரைக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

அதே நேரம் பொது கணக்கு குழு தலைவர் பதவி அதிமுகவுக்கு கிடைத்தால் அந்த பதவிக்கு கே.பி. முனுசாமி முயற்சி செய்கிறார் என்றும் வட மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூறுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி காங்கிரசுக்கே அதை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று அக்கட்சி தரப்பில் இருந்தும் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.

பொது கணக்கு குழு தலைவர் என்ற முக்கியமான பதவி காங்கிரசுக்கே மீண்டும் அளிக்கப்படுமா அல்லது அந்த பதவிக்கு அதிமுகவிலிருந்து ஒருவர் வருவாரா என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும் என்கிறார்கள் சட்டமன்ற வட்டாரங்களில்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

தமிழக வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ்… ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுமா?

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *