இறையன்புவுக்கு புதிய பதவி: ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதமா?

அரசியல்

தமிழ்நாடு தகவல் ஆணையம் கடந்த சில மாதங்களாகவே முடங்கி கிடக்கிறது என்று அறப்போர் போன்ற சமூக செயற்பாட்டு இயக்கங்களும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி போன்ற அரசியல் கட்சி தலைவர்களும் கடுமையாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் என்ன நடக்கிறது என்று கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம்.

“2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்ற ராஜகோபால் ஐஏஎஸ் கடந்த நவம்பர் மாதம் பதவிக்காலம் முடிந்ததும் அதில் இருந்து விலகினார். 

அதன் பிறகு புதிய தலைமை தகவல் ஆணையரை நியமிக்கவும் அவரின் கீழ் தகவல் ஆணையர்களை நியமிக்கவும் தமிழக அரசு நிர்வாக நடவடிக்கைகளை தொடங்கியது.

நீதிபதி அக்பர் அலி அளித்த தலைமையில் இதற்காக ஒரு தேடுதல் குழு அமைக்கப்பட்டது. அவர் தலைமை தகவல் ஆணையர் பதவிக்காக சில பெயர்களை பிப்ரவரி 14ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

இதற்கிடையே தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் வெ. இறையன்பு பதவிக் காலம் ஜூன் மாதம் முடிவடையும் நிலையில்… அவரே தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக  செய்திகள் கசிந்தன. இறையன்புவும் இந்த பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாக பேசப்பட்டது.

தலைமைச் செயலாளர் இறையன்புவை மேலும் 3 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு தலைமை தகவல் ஆணையர் பதவியை அளிக்க தயாரானார். கடந்த மார்ச் மூன்றாம் தேதி தலைமைச் செயலகத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டிய இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஆன பி. டி. ஆர். தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு அடுத்த தலைமை தகவல் ஆணையராக இறையன்பு ஐஏஎஸ் பெயரை ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடிவெடுத்தனர்.

இதன்படி பரிந்துரை செய்யப்பட்டுவிட்ட நிலையில் ஆளுநர் இன்னும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து துறைச் செயலாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘உங்களது துறையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களின் தற்போதைய நிலவரத்தை அறிய ஆளுநர் விரும்புகிறார். அதற்காக ஒவ்வொரு துறையில் இருந்தும் ப்ரசன்ட்டேஷன் அனுப்பி வையுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது அப்போது சர்ச்சையானது.

ஆளுநருக்காக தலைமை செயலாளர் செயல்படுகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இப்படிப்பட்ட தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமை தகவல் ஆணையராக பதவி ஏற்பதற்கு ஆளுநர் மாளிகையின் ஓப்புதல் தாமதமாவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

தலைமை தகவல் ஆணையர் பதவி நிரப்பப்பட்டால் தான் அவருக்கு கீழே இருக்கும் மற்ற தகவல் ஆணையர்களும் பதவி ஏற்க முடியும். 

இவ்வாறு இந்த நிர்வாக கட்டமைப்பு முழுமை பெற்றால் தான் தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்படும் பல்வேறு கேள்விகளுக்கு மேல்முறையீடுகளுக்கு உடனடியாக பதில் அளிக்க முடியும். இது தற்போது ஆளுநர் வசம் இருக்கிறது” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

வேந்தன் 

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை க்ளைமாக்ஸ்!

டிஜிட்டல் திண்ணை: ராகுலுக்கு நீதி கேட்டு பிரியங்கா நெடும் பயணம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *