பிரதமர் மோடி டெல்லியில் இந்திய விடுதலையின் 75 ஆவது அமிர்த காலத்தை ஒட்டி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை கட்டி எழுப்பியுள்ளார். அதன் திறப்பு விழாவும் முன்னதாக, புதிய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவும் விழாவும் இன்று (மே 28) ஆம் தேதி நடைபெற்றது.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் முதல் நிகழ்ச்சியான செங்கோல் பொருத்தும் நிகழ்வு இன்று காலை 7.30 மணிக்கே தொடங்கியது. நேற்று (மே 27) ஆம் தேதியே தமிழ்நாட்டில் இருந்து சென்ற இருபது ஆதீனங்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வாழ்த்தி ஆசீர்வதித்தார்கள்.

‘சிவ பெருமானின் அடியார்களான ஆதீனங்கள் அனைவரும் சேர்ந்து வந்து என்னை ஆசீர்வதித்தது எனக்கு கிடைத்த சிவ புண்ணியம்’ என்று நெகிழ்ந்தார் மோடி.
அந்த நிகழ்ச்சிக்குப் பின் இன்று காலை 7.30 மணிக்கெல்லாம் பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற வளாகத்துக்குள் தனியாக நுழைந்தார்.
அவருக்கு முன்னதாகவே கேட் நம்பர் 1 வாசலில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிரதமர் மோடியை வரவேற்றார். புதிய நாடாளுமன்றத்துக்குள் செல்லும் முன்னர் காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி.
நுழையும்போதே திருமறை, நாதஸ்வரம்
அதன் பிறகு புதிய நாடாளுமன்ற வளாகத்துக்குள் மோடி செல்லும்போதே தமிழ் திருமறைகளும், நாதஸ்வர இசையும் அவரது காதுகளில் ஒலித்தன. வேத குருவினர் பூர்ணகும்ப மரியாதையோடு மோடியை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
உள்ளே சுதர்சன ஹோமம், கணபதி ஹோமம் ஒருபக்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தில் இருந்து வந்த வேதகுருமார்கள் கணபதி ஹோமத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன் அருகே 1947 ஆகஸ்டு 14 ஆம் தேதி, பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனத்தால் கையளிக்கப்பட்ட அந்த செங்கோல் ஓரிடத்தில் மலர்கள் நிரம்பிய பீடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டு அதற்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதீனங்கள் புனித நீர் தெளித்தும், பூக்களாலும் பூஜைகள் செய்துகொண்டிருந்தனர்.
எந்தெந்த ஆதீனங்கள் நாடாளுமன்றம் சென்றனர்?

பிரதமர் மோடி உள்ளே நுழைந்ததும் தனது ஷூக்களை கழற்றி வைத்துவிட்டு சாக்ஸ் அணிந்த கால்களுடன் செங்கோல் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்தார்.
அந்த நேரத்தில் குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், செங்கோல் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், துழாவூர் ஆதீனம், சூரியனார் கோயில் மகாலிங்க பண்டார சுவாமிகள், பாதரக்குடி ஆதீனம், கௌமார ஆதீனம், பழனி சாது ஸ்வாமி ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம், சிவபுர ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் ஆதீனம், கோவிலூர் ஆதீனம், அவினாசி ஆதீனம், திருமுதுகுன்ற ஆதீனம், பழனி போகர் ஆதினம், திருப்பனந்தாள் காசி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, பூக்களால் துதித்தனர்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
என்று திருஞானசம்பந்தரின் தேவாரம் ஒருபக்கம் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்க… அனைவரையும் வணங்கியபடியே ஹோம குண்டத்தின் அருகே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவோடு வந்து அமர்ந்தார் பிரதமர் மோடி.
அந்த ஹோம குண்டத்தில் சுதர்சன ஹோமம், மகா கணபதி ஹோமம் செய்து கொண்டிருந்தனர் சிருங்கேரி வேத குருமார்கள். மோடியும், பிர்லாவும் வந்ததும் அவர்களை அமரவைத்து கையில் பூக்களைக் கொடுத்து முதலில் சங்கல்பம் செய்து வைத்தனர். அதாவது ஹோமம் செய்வதற்கான உறுதிமொழியை செய்து வைத்தனர்.
பின் வேத குருமார்கள் வேத மந்திரங்களை ஓத மோடியும், பிர்லாவும் கும்பிட்டபடியே அமர்ந்திருந்தனர். சில நிமிடங்களில் மந்திரங்கள் முடிந்து பூர்ணாகுதி எனப்படும் ஹோமத்தின் நிறைவுப் பகுதியை எட்டினர்.
அப்போது ஹோம குண்டத்தின் நெருப்பில் சிகப்புத் துணி, பழங்கள், தேங்காய் உள்ளிட்டவற்றை மோடி ஒவ்வொன்றாக சேர்த்தார். அத்தோடு ஹோமம் பூரணம் பெற்றது.
பார்வதி பதயே ஹரஹர மகாதேவ என்று ஹோம குண்ட மேடையில் இருந்து சமஸ்கிருத குரல்கள் எழும்ப….தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று தமிழ் திருமறைகள் அருகே இருந்து ஒலித்தன.
செங்கோலை வணங்கிய மோடி
சுதர்சன, கணபதி ஹோமம் நிறைவு பெற்ற நிலையில் தமிழ்நாட்டில் இருந்து அழைக்கப்பட்டிருந்த அனைத்து ஆதீனங்களும் ஹோம குண்ட மேடையின் அருகே வந்து நின்றனர். ஹோம மேடையில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி ஆதீனங்களின் அருகே வந்தார், ஒவ்வொரு ஆதீனத்தைப் பார்த்தும் வணங்கிய மோடி அங்கே வைக்கப்பட்டிருந்த செங்கோலுக்கு கீழே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
அப்போது அடியார்க்கும் அடியேன் என்ற பதிகத்தை ஓதுவார்கள் இசைத்துக் கொண்டிருந்தனர்.

அதன் பின் பூஜை செய்யப்பட்ட செங்கோலை திருவாவடுதுறை ஆதீனம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம் ஆகிய ஆதீனங்கள் சேர்ந்து செங்கோலை எடுத்து கோளறு பதிகம் பாடியபடியே பிரதமர் மோடியிடம் கொடுத்து அவரை அட்சதையால் ஆசீர்வதித்தனர். பிறகு ஆதீனங்கள் அவரவர் இடத்துக்கு சென்றிட பிரதமர் மோடி பய பக்தியோடு அந்த செங்கோலை கையில் பிடித்தபடியே தான் நின்ற இடத்திலேயே ஒரு பிரதசட்சண சுற்று வந்தார்.
பிறகு செங்கோலை கையில் ஏந்தியபடியே ஒவ்வொரு ஆதீனத்தின் அருகிலும் சென்று வணங்கினார். ஆதீனங்கள் செங்கோலைத் தொட்டும் பிரதமரின் தலையை தொட்டும் ஆசியளித்தனர். அதன் பிறகு செங்கோலை கையிலேந்தி கண்மூடி சில நிமிடங்கள் நின்றபடியே தியானம் செய்தார் மோடி.
பிர்லாவை அழைத்த மோடி
அதன் பிறகு தனக்கு முன்னால் தவில், நாதஸ்வர வித்வான்கள் இசைத்துக் கொண்டு செல்ல அவர்களின் பின்னால் ஆதீனங்களோடும் மக்களவைத் தலைவர் பிர்லாவோடும் செங்கோலை ஏந்தி மக்களவைத் தலைவரது இருக்கைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பீடத்தை நோக்கி நடை போட்டார் மோடி.
சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நடந்து வந்த பிரதமர் மோடி, ‘அரசாள்வர் ஆணை நமதே…’ என்ற கோளறு பதிகம் பாட, தவில் நாதஸ்வரம் இசைக்க, ஆதீனங்களின் ஆசிகளோடு அந்த பீடத்திலே செங்கோலை பொருத்தினார். செங்கோல் பொருத்துவதற்கு சற்று முன்னர் திரும்பிப் பார்த்து சற்று தள்ளி நின்றிருந்த சபாநாயகர் ஓம் பிர்லாவை பக்கத்தில் அழைத்துக் கொண்டார்.

அதன் பின் அங்கே வைக்கப்பட்டிருந்த குத்து விளக்குகளில் பிரதமர் மோடியும் சபாநாயகரும் தீபம் ஏற்றினர். அப்போது வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்தனர் வித்வான்கள்.
செங்கோலை பொருத்திவிட்டு திரும்பிய மோடி ஆதீனங்கள் ஒவ்வொருவரிடம் வணங்கி மீண்டும் ஆசிபெற்றார். இவையெல்லாம் நடக்க 26 நிமிடங்கள் ஆகின.
அதன் பின் மக்களவையில் செங்கோல் பொருத்தியதற்கான கல்வெட்டை திறந்து வைத்த மோடி அமர்ந்தார். அங்கே அனைத்து மத பிரார்த்தனை நடைபெற்றது. முஸ்லிம், கிறிஸ்துவர், ஜெயின், சீக்கியர் உள்ளிட்ட அனைத்து மத குருமார்களும் தத்தமது மத பாடல்களை இசைக்க விழா நிறைந்தது.
ஆதீனங்களுக்கு பின் வரிசையில் அமித் ஷா

இந்த விழாவில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதீன கர்த்தர்கள் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகிய முக்கிய அமைச்சர்கள் கூட இரண்டாம் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.
செங்கோல் பொருத்திய நிகழ்வை முழுக்க முழுக்க ஆதீனங்கள் நிரம்பிய ஓர் ஆன்மிக நிகழ்வாகவே உலகம் பார்க்க நடத்தியிருக்கிறார் மோடி.
-ஆரா
புதிய நாடாளுமன்றக் கட்டடம் : திறப்பு விழாவா… கால்கோள் இடும் விழாவா?
‘மக்களுக்கான கல்விக் கொள்கையே சமத்துவத்தை உருவாக்கும்’: ஜவஹர் நேசன்