இதுதான் உங்க இரு மொழிக் கொள்கையா? – பிடிஆரை மீண்டும் சீண்டிய அண்ணாமலை

Published On:

| By Selvam

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. ucation policy annamalai

நேற்று (மார்ச் 13) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழகத்தில் இருமொழி கொள்கையை சிறப்பாக பின்பற்றும் போது, திடீரென மும்மொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்றால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

பிடிஆரின் இந்த விமர்சனத்திற்கு தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,

“பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில் தான் படிக்கிறார். அதனால் பிடிஆருக்கு தானே அறிவில்லை என்று அர்த்தம். அவரது மகன் இந்திய குடிமகனா? அல்லது அமெரிக்க குடிமகனா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளிகளில் தான் படிக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில், மதுரையில் மத்திய அரசை கண்டித்து நேற்று நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய பிடிஆர், அண்ணாமலையின் கேள்விக்கு பதிலளித்தார். அவர் பேசும்போது,

“புதிய கல்வி கொள்கையை இன்றைக்கு நடைமுறைப்படுத்துவது சாத்தியமே இல்லை. ஆனால், அதையெல்லாம் விடுத்து 34 அமைச்சர்களின் மகன்கள் எங்கே படிக்கிறார்கள் என்று தனிப்பட்ட கேள்வியாக மாற்றி வருகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் தனியாக கூடுதல் மொழிகளை படிக்கட்டும்.

பாஜக பிரதிநிதி ஒருவர் எனது மகன்கள் எந்த மொழியில் பயின்றார்கள் என்று கேட்கிறார். எனது மகன்கள் பெயர் பழனி மற்றும் வேல். அவர்கள் இருவரும் எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரை இருமொழியில் தான் படித்தார்கள்” என்றார்.

இதுதொடர்பாக அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “நேற்று நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன்.

தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை பிடிஆர் சொல்ல மறந்துவிட்டார். அவரது மகன்கள் பயின்ற முதல் மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழி பிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ். இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?

பிடிஆரின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, பிடிஆர் இடையே வார்த்தை மோதல் நீடித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. New Education policy annamalai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share