New dam across Palaru

பாலாறு குறுக்கே புதிய அணை : தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!

அரசியல்

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி ஆந்திர அரசு  நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு இன்று (பிப்ரவரி 27) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்ற நிலையில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.  மேலும் இப்புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் விவசாயத்தை முடக்குவதாக அமையும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழகப் பாலாறு வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை . எனவே ஆந்திர அரசின் புதிய தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு பணிக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

New dam across Palaru

இந்த நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (பிப்ரவரி 27) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டு மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும்.

மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

2018 SCC(1) para 4.4.6.1

4.4.6.1 After coming into force of the 1947 Act, the doctrine of paramountcy has no room for application as the Government of India became the full sovereign authority. The two Agreements of 1892 and 1924 had neither any political arrangement nor touched any facet of sovereignty of India. Per contra, the Agreements cover the areas of large public interests which do not have any political element and in this backdrop, the agreements are neither inoperative nor completely extinct.

இவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக  ஆந்திர அரசு ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும்.

மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேஷபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையை கட்ட முயற்சித்த போது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு (O.S. No. 2 of 2006 ) தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு (O.S. No. 3 of 2016)தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது, அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கியிருப்பது முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது.

எனவே ஆந்திர அரசு இந்த அணைக்கட்டும் பிரச்சினை, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இம்மாதிரியான எந்த வித செயல்களையும் மேற்கொள்ளக்கூடாது என இருமாநிலங்களின் நலன் கருதி கேட்டுக்கொள்கிறேன்” என்று துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு!

ஆவின் பொருட்களை ரூ.48 கோடிக்கு விற்பனை செய்ய திட்டம்: மனோ தங்கராஜ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *