அதிமுகவில் புதிய நிர்வாகிகள்: தேர்தல் ஆணையத்துக்கு பன்னீர் கடிதம்!

அரசியல்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தொடர்வதாகவும், எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை கொரியர் மூலமாக அனுப்பினார் ஓபிஎஸ். அதில், “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்ற முறையில் தனக்கு இருக்கும் அதிகாரம் தற்போதும் தொடர்கிறது. ஒற்றைப் பதவி அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் அல்லது பிற புதிய பதவியிடங்கள் அதிமுகவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வழங்கப்பட்டால் அதை ஏற்க கூடாது.” என்று பன்னீர் செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 13) அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுக துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கழக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், உள்பட 11 பேர் கழக அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தசூழலில் மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ”இன்றுவரை நான் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது செல்லாது. எனது ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

– கிறிஸ்டோபர் ஜெமா

+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *