ஸ்டாலினை தவிர வேறு எந்த அரசியல்வாதியையும் நான் அண்ணன் என்று அழைத்ததில்லை என கோவையில் ராகுல் காந்தி கூறினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 12) தமிழ்நாட்டுக்கு வருகைத் தந்தார்.
மாலையில் நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், இரவில் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொண்டார். முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.
திமுக சார்பில் பொள்ளாச்சியில் போட்டியிடும் ஈஸ்வரசாமி, கோவை கணபதி ராஜ்குமார், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் விரைவில் புயல் வரப்போகிறது. நரேந்திர மோடியின் அரசு வெளியேற்றப்படவுள்ளது. நான் மோடி ஆட்சி என்று சொல்கிறேன். ஆனால் மோடியின் அரசல்ல, அதானியின் அரசு. காரணம் அதானிக்காக எல்லாவற்றையும் மோடி செய்துகொண்டிருக்கிறார்.
மும்பை விமான நிலைய உரிமையாளராக இருந்தவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சில வாரங்களுக்கு பிறகு அந்த விமான நிலையம் அதானி கைக்கு சென்றது. பின்னர் சிபிஐ விசாரணை கைவிடப்பட்டது.
அதானி எதை விரும்பினாலும் அது எளிதாக கிடைத்துவிடும்.
நான் நாடாளுமன்றத்தில் அதானி எப்படியெல்லாம் சலுகைகளை அனுபவிக்கிறார் என்று சொன்னவுடன் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எம்.பி பதவியை பறித்து வெளியேற்றினார்கள். நான் குடியிருந்த வீட்டையும் பறித்துவிட்டார்கள்.
அந்த வீட்டை அவர்கள் எடுத்துக்கொண்டதில் எனக்கு சிறுதுளியும் கவலையில்லை. மில்லியன் கணக்கான மக்களின் இதயத்தில் குடியிருக்க எனக்கு இடம் கிடைத்தது.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வீடுகளின் கதவுகள் எனக்காக திறந்துள்ளன” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “இவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தோசை பிடிக்கும் என்கிறார்கள். ஆனால் டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்கிறார்கள். தமிழ், பெங்காலி, கன்னடம் என மற்ற மொழிகளை ஏன் மறுக்கிறீர்கள்.
மோடி உங்களுக்கு தோசை மட்டுமல்ல, வடையும் கூட பிடிக்கும். உங்களுக்கு தோசை பிடிக்கிறதா வடை பிடிக்கிறதா என்பது பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்பதுதான் பிரச்சினை” என விமர்சித்தார்.
என்னுடைய சகோதரர், எனது மூத்த சகோதரர் ஸ்டாலின் என கூறிய ராகுல் காந்தி, நான் வேறு எந்த அரசியல்வாதியையும் அண்ணன் என்று சொல்லமாட்டேன். தேர்தல் பத்திரம் தான் உலகின் மிகப்பெரிய ஊழல் என்று அவர் சொன்னார். பிஜேபி வாஷிங் மெஷின் வைத்திருக்கிறது என்று சொன்னார்.
அதை பற்றி நான் இங்கு விளக்குகிறேன். முதலில் மோடி சொன்னார் சுத்தமான அரசியல் செய்யப்போகிறேன் என்றார். இரண்டாவதாக தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதன்மூலம் யார் பணம் கொடுத்தார்கள் என்று யாருக்கும் தெரியாது.
சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டம் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. யார் யார் பணம் கொடுத்தார்கள் என்ற விவரத்தை வெளியிடுமாறு உத்தரவிட்டது.
சில வாரங்களுக்கு அந்த வங்கி எந்த விவரத்தையும் வெளியிட வில்லை. பின்னர் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததும் அந்த தகவல் வெளியானது.
அதன்மூலம் ஆயிரக்கணக்கான கோடி பாஜகவுக்கு சென்றது தெரியவந்தது. அப்போதுதான் மோடி பற்றி வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது.
சிபிஐ, ஐடி,அமலாக்கத் துறை சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள் சில நாட்கள் கழித்து பிஜேபிக்கு தேர்தல் நிதி கொடுக்கிறார்கள். அதன் பிறகு அந்த நிறுவனங்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படுகிறது. இது சமூகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்.
நெடுஞ்சாலை, சுரங்க ஒப்பந்தங்கள் சில நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. சில நாட்கள் கழித்து அந்த நிறுவனம் தேர்தல் நிதி கொடுக்கிறது.
இவர்கள் செய்த ஊழலில் இது சிறிய பகுதிதான். ஆனால் பிரதமர் மோடி தன்னை சுத்தமான அரசியல்வாதி என்று சொல்லிக்கொள்கிறார். இதைத்தான் எனது அண்ணன் வாஷிங் மிஷின் என்று சொன்னார்” என குறிப்பிட்டார் ராகுல் காந்தி.
With my dear brother @RahulGandhi… pic.twitter.com/tvSQVi9zG2
— M.K.Stalin (@mkstalin) April 12, 2024
இந்த பிரச்சார கூட்டத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் அன்பான சகோதரருடன்” என கூறி ட்விட்டர் பக்கத்தில் இருவரது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக கோவை விமான நிலையத்திலிருந்து தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு செல்லும் வழியில் சிங்காநல்லூரில் பேக்கிரி ஒன்றில் தனது காரை நிறுத்திய ராகுல் காந்தி அங்கு இனிப்புகளை சாப்பிட்டு பார்த்து வாங்கினார்.
அந்த இனிப்புகளை பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”இந்த கூட்டம் 100 சதவீதம் வாக்குகளாக மாறும்” : அமித் ஷா நம்பிக்கை!