khushbu explain on cheri language

சேரி மொழி: குஷ்பூவின் விளக்கமும்… குவியும் கண்டனங்களும்!

அரசியல்

திமுக ஆதரவாளர்களுக்கு பதிலளிக்கும்போது நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ ‘சேரி’ மொழி எனக் குறிப்பிட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. khushbu explain on cheri language

இதனையடுத்து ‘சேரி’ என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் என்று பொருள் என தற்போது அவர் அளித்துள்ள விளக்கமும் சர்ச்சையாகியுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இதற்கு த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில்,  சினிமா வட்டத்தை தாண்டி அரசியல் தளத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனும் த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தனர்.

அதேபோல் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூவும் நடிகர் மன்சூர் அலி கான் பேச்சு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதற்கு ’மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான போது நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்காத குஷ்பூ, த்ரிஷாவுக்காக மட்டும் குரல் கொடுப்பதாகக் கூறி திமுக ஆதரவாளர் ஒருவர் விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டிருந்தார்.

அவருக்கு பதிலளித்த குஷ்பூ, “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். பெண்களை அவமதிக்க தவறான மொழியை கையாள்கிறார்கள். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.

குஷ்பூ தனது பதிவில், ‘சேரி மொழி’ என பயன்படுத்தியதை அடுத்து சமூகவலைதளங்களில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், காயத்ரி ரகுராம் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு மோசமான பேச்சுக்கு அதைத் திருப்பிக் கொடுப்பதற்காக மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக ‘சேரி மொழி’ என குறிப்பிடுவது சரியானது அல்ல என்றும்,  தனது வார்த்தைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பை குஷ்பூ கேட்க வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் சேரி மொழி எனக் குறிப்பிட்டது குறித்து குஷ்பூ இன்று புது விளக்கத்தை தனது எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக குஷ்பூ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது ட்வீட்டில் நான் பயன்படுத்திய மொழி தொடர்பாக சீற்றமடைந்து வந்த ஒரு கூட்டத்தைப் பார்த்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பெண்களுக்கான பிரச்சனைகளின்போது இந்தக் கூட்டம் மவுனமாகிவிடுகிறது. படித்தும் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இது குறித்து சொல்லித்தர விரும்புகிறேன்.

என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன். ‘சேரி’ என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள். நான் அன்பை பகிர்ந்துகொள்கிறேன் என கிண்டலாக அந்த சூழலில் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்.

என் அம்மாவால் எனக்குள் விதைக்கப்பட்ட மதிப்புகள் குறித்து நான் எப்போதும் பெருமைப்படுகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் முன் வரிசையில் இருப்பவள் நான். பாகுபாடு என்பது உங்களின் அழுக்குப்படிந்த மூளையில் உள்ளது. எனவே, எப்போதும் போல் என்னுடைய எதிர்வினை மூலமாக 2 நிமிட புகழைப் பெற வேண்டும் என நினைத்து செய்யும் செயல்களுக்கு நீங்கள் தகுதியானவர்கள் அல்ல” எனப் பதிவிட்டுள்ளார். khushbu explain on cheri language

இதனையடுத்து குஷ்பூவின் இந்த கருத்தும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அனிமல் படத்தின் ரன் டைம் தெரியுமா? செம ஷாக்!

விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது? – அமைச்சர் விளக்கம்!

+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *