நெல்லை, தூத்துக்குடி சாலைகள் – பாதிப்பு ரூ.1000 கோடி : எ.வ.வேலு பேட்டி!

அரசியல்

தென்மாவட்டங்களில் மழையால் 1000 கோடி ரூபாய் அளவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கடந்த 16, 17ஆம் தேதிகளில் பெய்த அதிகனமழையினால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல வழித்தட சாலைகள் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த சாலைகள், உடைந்த பாலங்களுக்குப் பதிலாக மாற்று பாதை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்த பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (டிசம்பர் 23) ஆய்வு செய்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தூத்துக்குடியில் 112 இடங்களில், சாலைகளில் உடைப்புகள் ஏற்பட்டு, சாலைகள் அடித்து செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது.  அதில், 84 இடங்களில் சாலைகள் செப்பனிடப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் பாளையங்கோட்டை செல்லும் சாலைகளில், மூன்று இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருந்தது. தற்போது இரண்டு இடங்களை நெடுஞ்சாலைத்துறை மூலம் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் 3 மீட்டர் நீளத்திற்கு சாலை உடைப்புகள் ஏற்பட்டு. சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனை சீர்செய்ய, கிராவல் இங்கு எடுக்க முடியாத நிலை இருப்பதால், வெளியிலிருந்து கிராவல் கொண்டுவரப்பட்டு. நேற்று முதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பணிகள் நிறைவடைந்தவுடன் திருச்செந்தூர், பாளையங்கோட்டை செல்லும் வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.

ஆத்தூர் பாலமும், ஏரலுக்கு அருகே இருக்கிற குரும்பல் பாலமும் ஏறத்தாழ ரூ.19.94 கோடி மதிப்பீட்டில், அதிமுக. ஆட்சியில் கட்டப்பட்டது. அணுகு சாலை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுவிட்டது. அப்பகுதியில் தரைப்பாலம் ஒன்று உறுதியாக இருக்கிறது .

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள பாலம் தேசிய நெடுஞ்சாலை அலகினை சார்ந்தது. அதில் ஒரே ஒரு பில்லர் மட்டும் கீழே இறங்கியுள்ளது. பொறியாளர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழுவினை உடனடியாக வரவழைத்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு தூத்துக்குடியில் 95 சென்டி மீட்டர் பெய்ததால், அதிகம் பாதிக்கப்பட்டது சாலைகள்தான். நெடுஞ்சாலைத்துறையை பொறுத்த வரையில், சாலைகளை தற்காலிகமாக செப்பனிடுவது என்பது உடனடியாக மேற்கொள்ள முடியும்.

நிரந்தரமாக சரிசெய்ய வேண்டுமென்றால், கோட்டப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து, எந்த வகையில் நிரந்தரமாக சரிசெய்ய முடியும் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில், திட்ட மதிப்பீடு தயார் செய்து, திட்ட மதிப்பீட்டிற்கு அதற்கான குழு ஒப்புதல் அளித்தவுடன், நிதித்துறையின் ஆலோசனைப் பெற்று, ஒப்பந்தம் கோரப்பட்டு, முதலமைச்சரிடம் ஆணை பெற்றுதான் நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும்.

நெடுஞ்சாலைத்துறையை பொறுத்த வரையில், சாலைகள் ரூ.1000 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 46 சாலைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 112 சாலைகளும், தென்காசி மாவட்டத்தில் 13 சாலைகளும், விருதுநகர் மாவட்டத்தில் 13 சாலைகளும். நாகர்கோவிலில் 5 சாலைகளும் சேதமடைந்துள்ளன” என்று விளக்கமளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இந்திய பெருங்கடலில் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

IPL2024: ‘கர்மா இஸ் எ பூமராங்’ மும்பைக்கு எதிராக பறக்கும் மீம்ஸ்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *