“உங்களால் என் குரலை அடக்க முடியாது” என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி எதிர்கட்சிகளை பார்த்து கூறினார்.
இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மக்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது காங்கிரசை கடுமையாக சாடிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 7) குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், “எதிர்கட்சியினால் எனது குரலை அடக்க முடியாது. ஏனென்றால் நாட்டு மக்கள் இந்த குரலுக்கு பலம் கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது வடக்கு தெற்கு என பிரித்தாள முயற்சித்து வருகிறது.
காங்கிரஸில் அதன் தலைவர்கள் மற்றும் கொள்கைகளுக்கு உத்திரவாதம் இல்லை. ஆனால் மோடியின் உத்தரவாதத்தை பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி காங்கிரசுக்கு தெரியும். ஆனால் அதை தீர்க்கவில்லை.
ஆனால் நாங்கள் நாட்டை அதன் பிரச்சினைகளிலிருந்து வெளியே கொண்டு வருகிறோம்.
ஹெச்ஏஎல், பிஎஸ்என்எல், ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை காங்கிரஸ் அழித்து விட்டது. ஆனால் தற்போதைய சூழலில் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவற்றின் லாபம் ரூ.2.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக உள்ளது.
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர். அவர் எந்த ஒரு இட ஒதுக்கீட்டையும் விரும்பவில்லை. இட ஒதுக்கீடு திறன் இன்மையை ஊக்குவிக்கும், அது சாதாரணமானவர்களை பணியில் அமர வைக்கும் என்று நேரு குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்டுகிறேன். இது தொடர்பாக அவர் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு தான் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் ஜம்மு காஷ்மீரில் தங்களது உரிமைகளை பெற்றனர்.
மத்தியில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைந்த போதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது.
காங்கிரஸ் ஆட்சியின் போது இந்திய பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் இருந்தது. எங்கள் ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது.
ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் மலிவு விலையில் மருந்துகள் வழங்குவது என்பது மோடியின் உத்தரவாதம்.
இந்தியாவின் முன்னேற்றம் முன்னணியில் இருக்க வேண்டும். அதில் அரசியல் இருக்கக் கூடாது என்பது எனது உறுதியான நம்பிக்கை.
மேலும் அவர், பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆசீர்வதித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது.
எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டதே என எனக்கே கவலையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 40 முதல் 50 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
நாட்டின் நிலங்களை எதிரிகளுக்கு தாரை வார்த்தது காங்கிரஸ்தான். இப்போது பாதுகாப்பை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பஸ் ஊழியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி : அடுத்த கட்டம் என்ன?
”சென்டிமெண்ட் ரொம்ப முக்கியம்” GOAT ரிலீஸ் தேதி இதுதான்?