திமுக அமைச்சர் கே. என். நேரு, ‘ கடந்த காலங்களில் அதிமுகவுக்கும் திமுகவுக்குமான போட்டி அண்ணன் தம்பி போட்டியாக இருந்தது. இப்போது சகல அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்களோடு நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
அதிமுகவை பாஜக தான் பிளவு படுத்தி வைத்திருக்கிறது’ என்று திருச்சியில் பேசிய பேச்சு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது.
நேருவின் இந்த பேச்சை வீடியோவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பார்த்திருக்கிறார்.
அப்போது இது பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய எடப்பாடி, “ஏதோ அதிமுக பிஜேபிக்கு அடிமையாக ஆகிவிட்டது போலவும் அதிமுகவை பிஜேபி தான் துண்டு துண்டாக பிரித்து வைத்திருப்பது போலவும் திமுகவினர் தொடர்ந்து பேசுகிறார்கள்.
ஏற்கனவே சட்டமன்றத்தில் கூட என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசும் போது வேலு இதே கருத்தை சொல்லி இருக்கிறார்.
அதிமுக பிளவுபட்டெல்லாம் இல்லை. 95 சதவீதத்திற்கும் மேலான தொண்டர்கள் நிர்வாகிகள் நம்முடைய தலைமையிலே இருக்கிறார்கள்.
மீதி இருக்கும் சில பேர் சசிகலா, டிடிவி, பன்னீர் என்று பிரிந்து கிடக்கிறார்கள்.
இதை வைத்துக்கொண்டு அதிமுகவையே ஏதோ பிஜேபி பிளந்து விட்டது போல அவர்கள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.
பன்னீர்செல்வத்துக்கு பெரிய பலம் இல்லை என்பது பாஜகவுக்கு தெரியும். அதனால் அவரை பாஜக ஆதரிக்கவில்லை.
ஆனால் பன்னீர்செல்வத்துக்கு எந்த பலமும் இல்லை என்று தெரிந்தும் திமுக தான் அவரை தொடர்ந்து ஆதரித்துக் கொண்டிருக்கிறது.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் பன்னீர் செல்வத்தை அமர வைத்து அழகு பார்ப்பது திமுக தான்.
பன்னீர்செல்வம் என்ற தனிநபரையும் அவரோடு இருக்கும் சில தனிநபர்களையும் அதிமுக என்று முத்திரை குத்தி அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது என்ற தோற்றத்தைக் காட்டி அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திமுக தான் முயற்சி செய்கிறது.
ஆனால் ஏதோ பிஜேபி தான் அதிமுகவை பிளவுபடுத்துவதைப் போல திமுகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பன்னீர்செல்வம் திமுகவோடு மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக விற்கே தேர்தல் நிதி கொடுத்தவர் தானே அவர்? எனவே இதுபோல பேசி அதிமுக தொண்டர்களை குழப்பும் வேலையில் திமுகவின் அமைச்சர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அதை நாம் முறியடிக்க வேண்டும்”என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார் எடப்பாடி.
வேந்தன்