சிவா வீட்டில் நேரு: பிரஸ் மீட்டுக்கு முன்னும் பின்னும் நடந்தது என்ன?

அரசியல்

மார்ச் 17 ஆம் தேதி மாலை திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு திருச்சியில் இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டு வாசலில் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, ‘எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று சொல்லிச் சென்றனர்.

ஆனால் திருச்சி திமுகவில் இந்த சர்ச்சைகளின் சுவடு இன்னும் மறையவில்லை. திருச்சி சிவாவுக்கும், அமைச்சர் கே.என். நேருவுக்கும் இடையிலான பனிப்போர் திருச்சி திமுகவில் அனைவரும் அறிந்ததுதான்.

nehru meets siva at his home

இந்த நிலையில் மார்ச் 15 ஆம் தேதி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவுக்கு கறுப்புக் கொடிகள் காட்டிய நிலையில், சில மணி நேரங்களில் நேருவின் ஆதரவாளர்கள் பூட்டியிருந்த சிவாவின் வீட்டு போர்டிகோ வரை சென்று கார்களையும் டூவீலர்களையும் உடைத்தனர். திருச்சி சிவாவின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் நடந்த இறகுப் பந்து மைதான திறப்பு விழாவில் அவர் புறக்கணிக்கப்பட்டார் என்பதுதான் கறுப்புக் கொடி போராட்டத்துக்குக் காரணம்.

இந்த சம்பவத்தை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடந்த நிலையில் காவல்நிலையத்திலும் திமுகவினர் நடத்திய அத்துமீறல்களும் அராஜகமும் முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதும் அவர் கடுமையான கோபம் அடைந்திருக்கிறார்.

அதற்கு மறுநாள் 16 ஆம் தேதி காலை பஹ்ரைனில் இருந்து திருச்சி வந்த சிவா தன் வீட்டுக்குச் சென்றார். வீட்டு வாசலிலேயே செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த காலத்திலும் நிறையச் சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். என்னைவிட எனக்குக் கட்சி முக்கியம். அதனால் பலவற்றை நான் பெரிது படுத்தியதும் இல்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை. தனிமனிதனை விட இயக்கம்தான் பெரியது என்ற தத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்தவன். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன்.

nehru meets siva at his home

இப்போது நடந்த நிகழ்வு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் சீனியர் சிட்டிசன்கள் இருக்கிறார்கள். நான் ஊரில் இல்லாத போது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 60 வயதானவர்கள் எல்லாம் காயமடைந்திருக்கிறார்கள். நான் நிறைய பேச வேண்டியிருக்கிறது. நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) எனக்கு எல்லாமே… உங்களை விட நான் யாரிடம் பேசப் போறேன்? நான் விரைவில் பேசுகிறேன்” என்று மனமுடைந்து பேசினார்.

திருச்சி சிவாவின் பேட்டியை பார்த்த திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், திருச்சி சிவாவின் விரக்தியை அவரது வார்த்தைகள் மூலம் புரிந்துகொண்டார். கூடவே அவருக்கு ஏற்கனவே நடந்த வேறு சில அரசியல் ஆலோசனைகளும் நிழலாடியிருக்கிறது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை பற்றிய ஆலோசனைகளை ஸ்டாலின் அவ்வப்போது கட்சியின் சீனியர்களுடன் நடத்தி வந்திருக்கிறார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், ‘அடுத்து ஆட்சிக்கு பாஜகதான் மீண்டும் வரும் என்று சொல்கிறார்கள். ஒருவேளை ஆட்சிக்கு பாஜக வந்துவிட்டால் நாம் மாநில அரசை நடத்த நிச்சயம் அவர்களை அனுசரித்துதான் செல்ல வேண்டும். அதனால் அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன் டெல்லியில் நம் முக்கியத்துவத்தை அர்த்தமுள்ளதாக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்.

nehru meets siva at his home

இதே போல திருச்சி சிவாவிடம் ஸ்டாலின் கேட்டபோது, ‘அடுத்த ஆட்சியும் பாஜக வர வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கேற்றபடி நாம் சில வியூகங்களை வகுக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் திருச்சி சிவா. நாடாளுமன்றத்தில் உப்புமா கதையை சொல்லிய திருச்சி சிவா அந்த உதாரணத்தை ஸ்டாலினிடமும் சொல்லிக் காட்டியிருக்கிறார்.

இதற்கிடையே திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவும், ‘மோடிக்கு நேருவை தெரியுமா? என் அப்பா சிவாவை தெரியுமா? நேரு என்றால் ஜவஹர்லால் நேருவா என்று கேட்பார். ஆனால் என் தந்தையை பிரதமருக்கு நேரடியாகவே தெரியும்’ என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் அமைச்சர் நேருவை உடனடியாக அலைபேசியில் அழைத்து, ‘நீங்க உடனடியா சிவா வீட்டுக்கு போயிட்டு அவர்கிட்ட பேசிட்டு, ரெண்டு பேரும் சேர்ந்து பிரஸ்மீட் பண்ணுங்க’ என்று உத்தரவிட்டார்.

இதையடுத்துதான் அமைச்சர் நேரு மார்ச் 17 ஆம் தேதி மாலை 6 மணியளவில் திருச்சி சிவாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார் அமைச்சர் நேரு. அவரோடு நேருவின் ஆதரவு நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

சில நிமிடங்கள் சிவாவின் வீட்டில் இருந்த நேரு அதன் பின் சிவாவை அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்து இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நேரு, ‘இனி எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை’ என்றார். சிவாவும், ‘நடந்தது நடந்ததாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என்று கூறினார்.

ஆனாலும் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திருச்சி சிவாவின் முகம் இறுக்கமாகவே காணப்பட்டது. செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் மீண்டும் சிவாவின் வீட்டுக்குள் சென்ற நேரு அதன் பின் டீ குடித்துவிட்டு புறப்பட்டிருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது நடந்தது பற்றி உளவுத்துறை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விரிவான அறிக்கையை அனுப்பியிருக்கிறது. இந்த சந்திப்பு தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.

“திருச்சி சிவாவின் வீட்டுக்கு சென்றது நேருவுக்கு கௌரவக் குறைச்சலான நிகழ்வு என்றே நேருவுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். முதலமைச்சரின் அலைபேசி அழைப்பை அடுத்துதான் சிவாவின் வீட்டுக்கே சென்றார் நேரு. அங்கே திருச்சி சிவா தனது கோபத்தையும் வருத்தத்தையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நேருவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

சிவாவின் வீட்டுக்கு நேரு சென்றதும் அவருடன் வந்த சிலரைத் தவிர மற்றவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். அப்போது நேரு சிவாவிடம் தனது இயல்பான பாணியில், ‘நீ ஊர்ல இல்லேன்னு எனக்கு தெரியாது. இந்த நிகழ்ச்சி இங்க நடக்குதுனும் எனக்கு தெரியாது…’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்.

அப்போது சிவா, ‘இதாங்க உங்ககிட்ட…. பொது இடமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட இதுபோல வீடாக இருந்தாலும் சரி என்னை ஒருமையிலயே பேசுறீங்க. இது எல்லாமே நல்லாயில்லை. கட்சிக்காகவும் தலைவருக்காகவும் நான் பொறுமையா இருக்கேன்’ என்று சற்று கோபமாகவே சொல்லியிருக்கிறார்.

நேரு தனது கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘தண்ணி எடுத்துட்டு வாங்கப்பா குடிப்போம்’ என்று கேட்க அதன் பிறகே வந்தவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல், ‘டீ போடுங்கப்பா. டீய குடிச்சிட்டு போவோம்’ என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் டீ வர தாமதம் ஆகியிருக்கிறது. அதனால் நேரு, ‘சரி வாங்க பிரஸ் மீட் பண்ணிட்டு வந்துடுவோம்’ என்று சிவாவை வெளியே அழைத்து வந்திருக்கிறார்.

nehru meets siva at his home

பிரஸ்மீட்டில் நேரு சற்று நெருடலாகவே காணப்பட்டார். சிவாவும் இறுகிய முகத்தோடுதான் இருந்தார். பிரஸ் மீட் முடிந்த கையோடு மீண்டும் சிவாவின் வீட்டுக்குள் சென்ற நேரு டீயை குடித்துவிட்டே அதன் பிறகு சில நிமிடங்கள் சிவாவோடு தனியாக பேசிவிட்டு புறப்பட்டார்.

இந்த சந்திப்பின் மூலம் இருவருக்கும் இடையேயான பூசல் மறைந்துவிட்டதாக செய்திகள் வருகின்றனவே தவிர,. கொஞ்சமும் குறையவில்லை. நேருவை சிவா நடத்திய விதமும், நேருவின் நெருடலான அந்த நிமிடங்களும் இருவருக்கும் இடையிலான பனிப்போரை அதிகப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன” என்று உளவுத்துறை விரிவான அறிக்கையை மார்ச் 18 ஆம் தேதி முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளது” என்கிறார்கள் இன்ட்டெலிஜன்ஸ் வட்டாரங்களில்.

வேந்தன்

முதல்வர் அறிவிப்பு: இன்று பெண் காவலர்கள் அணிவகுப்பு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஈக்வாடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 14 பேர் உயிரிழப்பு!

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *