நேருவும் அம்பேத்கரும்

அரசியல் சிறப்புக் கட்டுரை

– ராமச்சந்திர குஹா Nehru and Ambedkar relationship is obscured

தமிழில் : ரவிக்குமார்

நேரு-அம்பேத்கர் உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்த புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை. இது ஒரு பரிதாபமான விஷயம், ஏனென்றால் முக்கியமான காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவின் பிரதமராகவும், சட்ட அமைச்சராகவும் ஒன்றாக வேலை செய்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, நேரு அம்பேத்கரை தனது அமைச்சரவையில் சேரும்படி கேட்டுக் கொண்டார். இந்தியாவிற்கு சுதந்திரம் வந்துவிட்டதால், மற்ற கட்சிகளில் உள்ள அரசியல் சாதுர்யங்களைக் கொண்ட தலைசிறந்த மனிதர்களும் அரசாங்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்த காந்தியின் யோசனையால் இது நடந்தது. (இவ்வாறு, அம்பேத்கரைத் தவிர, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் காங்கிரசை வாழ்நாள் முழுவதும் விமர்சித்தவருமான ஆர். கே. சண்முகம் செட்டியும் அமைச்சரவையில் நிதி அமைச்சராக ஆக்கப்பட்டார்.)

அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கரின் பணி நன்கு அறியப்பட்டதாகும். ஆனால் இந்து தனிநபர் சட்டங்களின் சீர்திருத்தம் குறித்த அவரது உழைப்பு அதிகம் அறியப்படவில்லை. சர் பி.என். ராவ் தயாரித்த வரைவின் அடிப்படையில், அம்பேத்கர் இந்து சட்டத்தின் மாறுபட்ட விளக்கங்கள் மற்றும் மரபுகளை ஒரே ஒரு ஒருங்கிணைந்த சட்டத்திற்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் இந்தச் செயல் தீவிரமான சீர்திருத்தச் செயலாகவும் இருந்தது, இதன் மூலம் சாதியின் வேறுபாடுகள் பொருத்தமற்றதாக மாற்றப்பட்டு, பெண்களின் உரிமைகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டன.

இந்த மாற்றங்களின் விவரங்களை ஆராய விரும்புவோர், முல்லாவின் இந்து சட்டத்தின் மகத்தான கோட்பாடுகள் (இப்போது அதன் பதினெட்டாவது பதிப்பில்) அல்லது இந்த விஷயத்தில் முன்னணி அறிஞரான பேராசிரியர் ஜே.டி.எம். டெரட்டின் படைப்புகளைப் படிக்கவேண்டும். அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்களைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம் : (1) முதல் முறையாக சொத்தில் மகனுக்கு இணையான பங்கு விதவைக்கும் மற்றும் மகளுக்கும் வழங்கப்பட்டது; (2) முதல் முறையாக, பெண்கள் கொடூரமாக நடந்துகொள்ளும் கணவனை விவாகரத்து செய்ய அனுமதிக்கப்பட்டனர்; (3) முதல் முறையாக, கணவன் இரண்டாவது மணம் செய்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டது; (4) முதன்முறையாக, வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் இந்து சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டது; (5) முதல் முறையாக, ஒரு இந்து தம்பதியினர் வேறு சாதியின் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என அனுமதிக்கப்பட்டது.

இவை உண்மையிலேயே புரட்சிகரமான மாற்றங்கள், இது மரபுவழி சிந்தனை கொண்ட மக்களிடையே எதிர்ப்புப் புயலை எழுப்பியது. பேராசிரியர் டெரெட் குறிப்பிட்டது போல், ‘எதிர்ப்புக்கு எதிராக திரட்டப்படக்கூடிய ஒவ்வொரு வாதமும் ஒன்றுக்கொன்று ரத்து செய்யப்பட்ட பலவற்றையும் உள்ளடக்கியது’. எனவே, ‘அனைத்து ஒடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர்களுக்கும் விவாகரத்து வழங்குவது தாக்குதலின் முக்கிய இலக்காக மாறியது, மேலும் ‘இந்து மதம் ஆபத்தில் உள்ளது’ என்ற கூக்குரல் பலரால் எழுப்பப்பட்டது, அவர்களின் எதிர்ப்புக்கு உண்மையான காரணம் ஆண் வாரிசுகளுக்கு இணையாக பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதுதான். விவசாய வர்க்கங்களை விட சில வணிக சாதியினரிடையே கடுமையான கோபத்தை இது உண்டாக்கியது.

எதிர்ப்பு தெரிவித்த அமைப்புகளின் முன்னணிப் படையாக ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) இருந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1949 – ஒரு ஆண்டில் மட்டும் டெல்லியில் 79 கூட்டங்களை ஏற்பாடு செய்தது, அங்கு நேரு மற்றும் அம்பேத்கரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன, ‘ இந்து சட்ட மசோதா என்பது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான தாக்குதல்’ என்று கண்டனம் செய்யப்பட்டது.

புதிய மசோதாவுக்கு எதிரான இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் சுவாமி கர்பத்ரி ஆவார். டெல்லியிலும் பிற இடங்களிலும் அவர் ஆற்றிய உரைகளில், இந்து சட்ட மசோதா குறித்து பொது விவாதத்திற்கு வருமாறு அம்பேத்கருக்கு அவர் சவால் விடுத்தார். ‘சாஸ்திரங்கள் உண்மையில் பலதார மணத்தை ஆதரிக்கவில்லை’ என்ற சட்ட அமைச்சர் அம்பேத்கரின் கருத்தை மறுத்து, சுவாமி கர்பத்ரி திருமணம் பற்றிய யாக்ஞவல்கியரின் கூற்றை மேற்கோள் காட்டினார்:

‘மனைவி குடிப் பழக்கம் உள்ளவளாகவோ, பயனற்றவளாகவோ, தந்திரக்காரியாகவோ, மலடியாகவோ, கட்டுப்பாடின்றி செலவழிக்கும் பெண்ணாகவோ, மோசமாக பேசக்கூடியவளாகவோ, அவளுக்கு மகள்கள் மட்டுமே பிறந்து மகன் இல்லையென்றாலோ, அவள் தன் கணவனை வெறுத்தாலோ, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே கணவன் இரண்டாவதாக ஒரு மனைவியைத் திருமணம் செய்து கொள்ளலாம்” என யாக்ஞவல்கியரின் ஸ்மிருதியில் மூன்றாவது பகுதி, மூன்றாவது அத்தியாயம், மூன்றாவது சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது எனத் துல்லியமாக ஆதாரத்தை சுவாமி வழங்கினார். ஆனால் இப்படியான குணங்கள் கணவனுக்கு இருந்தால் மனைவி வேறொரு திருமணம் செய்துகொள்ள அந்த ஸ்மிருதி அனுமதிக்கிறதா என்பதைப்பற்றி அவர் கருத்து எதுவும் கூறவில்லை.

75 years on, India's dreams remain just that

ஜனவரி 1950 இல் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ராஜேந்திர பிரசாத் உட்பட இந்து சட்ட மசோதாவுக்கு சில மரியாதைக்குரிய எதிர்ப்பாளர்களும் இருந்தனர். 1950 மற்றும் 1951 ஆம் ஆண்டுகளில் மசோதாவை நிறைவேற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதிர்ப்பு வலுத்ததால், அதைக் கைவிட வேண்டியதாயிற்று. அம்பேத்கர் நேரு அமைச்சரவையிலிருந்து மனம் வெறுத்து ராஜினாமா செய்தார், ‘நேருவுக்கு இந்த மசோதாவை இறுதிவரை ஆதரிக்கத் தேவையான ‘அக்கறையும் உறுதியும்’ இல்லை’ என்று அம்பேத்கர் குற்றம் சாட்டினார் .

உண்மையில், நேரு முதல் பொதுத் தேர்தல் வருவதற்காகக் காத்திருந்தார். அந்தத் தேர்தலில் அவருக்கும் காங்கிரஸுக்கும் மக்கள் ஆதரவை வழங்கியபோது, ​​அவர் இந்து சட்ட மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தினார், ஒற்றை மசோதாவாக அல்லாமல், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்றவற்றைக் கையாளும் பல தனித் தனி சட்ட மசோதாக்களாகப் பிரித்து அறிமுகம் செய்தார். நேரு இந்த சீர்திருத்தங்களுக்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய முக்கியமான உரைகள் சக காங்கிரஸ்காரர்களை அவர் பக்கம் கொண்டு வந்தன.

1955 மற்றும் 1956 இல் இந்து சட்ட மசோதா பல்வேறு மசோதாக்களாகப் பிரித்து அறிமுகம் செய்யப்பட்டு சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன. அந்நிலையில் அம்பேத்கர் இறந்தார்.

அவரது மறைவு குறித்து லோக்சபாவில் பேசிய நேரு, “எல்லாவற்றிற்கும் மேலாக ‘இந்து சமுதாயத்தின் அனைத்து அடக்குமுறை அம்சங்களுக்கும் எதிரான கிளர்ச்சியின் அடையாளமாக’ அம்பேத்கர் நினைவுகூரப்படுவார்” என்று குறிப்பிட்டார். “ இந்து சட்டங்களை சீர்திருத்தும் பிரச்சினையில் அவர் காட்டிய அக்கறை மற்றும் சிரமத்திற்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். அவரே வடிவமைத்த ஒரே பெரிய மசோதாவாக இல்லாமல் தனித்தனி மசோதாக்களாக அந்தச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று நேரு தனது உரையில் குறிப்பிட்டார்.

Mahatma Gandhi, Jawaharlal Nehru, B R Ambedkar had disagreements, but what got them united? | India.com

மரபுவழிப்பட்டவர்களின் பார்வையில் காந்தியும் நேருவும் ‘குறைபட்ட இந்துக்கள்’, அம்பேத்கர் இந்துவே இல்லை. ஆயினும்கூட, இந்து மதத்துக்குப் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்களைவிட நம்பிக்கையின் வலிமையினாலும், கொள்கை உறுதியாலும் இந்த மூவரும் இந்து மதத்துக்கும், இந்துக்களுக்கும் அதிக நன்மைகளைச் செய்திருக்கிறார்கள்.

நன்றி: தி இந்து (தி இந்து ஆங்கில நாளேட்டில் 18/7/2004 அன்று வெளியான கட்டுரையின் ஒரு பகுதி. இன்று ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள்) Nehru and Ambedkar relationship is obscured

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிடா : விமர்சனம்!

நேருவின் 135வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

20 Years of ஜேஜே : ஜேஜே டைட்டிலை கேட்ட விஜய்… ஷாலினி கொடுத்த ஐடியா.. இயக்குனர் சரண் Exclusive பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
9
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *