”ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர் நேரு” : முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By christopher

“ராகுல் காந்தியின் பேச்சு ஜவஹர்லால் நேரு பேசுவது போலவே உள்ளது. நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 25) மாலை வெளியிட்டார். இதனை இந்து நாளிதழ் முன்னாள் ஆசிரியர் என்.ராம் பெற்றுக்கொண்டார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘கலைஞரின் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய கோபண்ணாவின் ‘மாமனிதர் நேரு’ என்ற நூலை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதனை நூல் என்று சொல்வதை விட வரலாற்றின் கருவூலம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இது ஜவஹர்லால் நேருவினுடைய வரலாறு மட்டுமல்ல. காங்கிரசின் வரலாறு மட்டுமல்ல. இது இந்தியாவின் வரலாறாக இருக்கும்.

இன்னும் சொல்லப் போனால் கடந்த கால இந்தியாவின் வரலாறாக மட்டுமில்லாமல் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய நூலாகவும் இது இருக்கும்.

nehru aginst one nation culture - mkstalin

எத்தகைய உன்னதமான வளர்ச்சியை இந்தியா பெற வேண்டும் என்று வழிகாட்டும் நூலாகவும் இது இருக்கும்.

அந்த வகையில் காலத்திற்கு தேவையான கருவூலங்களை உருவாக்கி தந்திருக்க கூடிய கோபண்ணா அவர்களை நான் வாழ்த்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியில் உள்ளவராக இருந்தாலும் திராவிட இயக்க சமூகநீதி கொள்கைகளில் பற்று கொண்டவர் கோபண்ணா. கலைஞரின் பாராட்டிற்கும், அன்பிற்கும் உரியவர்.

2006 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் நேரு பற்றிய பல அரிய தகவல்களை அனைத்து தகவல்களையும் திரட்டி 2018 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் நூலை வெளியிட்டார்கள்.

ராகுல் காந்தியின் பேச்சு ஜவஹர்லால் நேரு பேசுவது போலவே உள்ளது. நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவரது நடை பயணம் இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல்காந்தி தேர்தல் அரசியல் பேசவில்லை. கொள்கை அரசியல் பேசுவதால்தான் ஒரு சிலரால் விமர்சிக்கப்படுகிறார்.

ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒற்றை மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர். வகுப்புவாதம், தேசியவாதம் சேர்ந்திருக்க முடியாது என சொன்னவர் நேரு.

மிகச்சிறந்த ஜனநாயகவாதியாகவும், இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையைப் போற்றியவருமாக விளங்கியவர் நேரு.

அவதூறுகளைப் பரப்பி போலி வரலாற்றைப் புனைந்து பிற்போக்குத்தனங்களை உயர்த்திப் பிடிக்க அடிப்படைவாதிகள் முயலும் காலத்தில் பண்டித நேருவின் வாழ்வை அனைவரும் அறிந்திட கோபண்ணா மேற்கொண்டுள்ள முயற்சி அவசியமானது; போற்றத்தக்கது,

மகாத்மா காந்தி, பண்டித நேரு உள்ளிட்டவர்கள் காண விரும்பிய முற்போக்கு இந்திய சமுதாயம் அமைந்திட நமது ஒற்றுமைப் பயணத்தைத் தொடருவோம்.” என தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மது குடிப்பவர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள்: அமைச்சர்!

”கேங்ஸ்டா”: துணிவு 3வது சிங்கிள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel