ஒடிசா ரயில் விபத்திற்கு அலட்சியமே காரணம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை மத்திய மாநில அரசுகள் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விபத்திற்கு மத்திய அரசின் அலட்சியம் தான் காரணம் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலசோர் ரயில் விபத்து நெஞ்சை நொறுக்குகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன்,
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசும்போது,
“மத்திய அரசின் ரயில்வே துறை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொண்ட விதமும், விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டதும்தான் இவ்வளவு பெரிய உயிரிழப்பிற்கு வழிவகுத்துள்ளது. உயர்மட்ட விசாரணை நடத்தி இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியத்தால் மத்திய அரசு ரயில்வே துறையை நாசமாக்கிவிட்டது” என்று தெரிவித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.
மோனிஷா
எங்கெங்கும் உடல்கள்: விபத்தில் நேரில் சிக்கியவரின் நெஞ்சைச் சுடும் பதிவு!
விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டவர்: ஸ்பாட்டுக்கு சென்ற தமிழக அதிகாரி விளக்கம்!