நீட் கையெழுத்து இயக்கத்தில் பெறப்படும் கையெழுத்துகளை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்குவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் கையெழுத்தைத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தபால் சீட்டில் போட்டு அனுப்பினார்.
நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்தார் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில் திமுகவின் நீட் கையெழுத்து இயக்கத்தை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எல்லோரிடமும் கையெழுத்து வாங்கி எங்கே கொண்டு கொடுக்க போகிறார். கையெழுத்து வாங்கி எங்கே கொண்டு போய் கொடுத்து எப்படி நடைமுறைப்படுத்துவீர்கள்.
மக்களவை தேர்தல் வந்துவிட்டதால் மக்களை போய் சந்திக்க வேண்டும். அப்போது மக்கள் கேள்வி கேட்பார்கள். அதற்கு ஒரு பதில் வேண்டும் என்பதற்காக மக்களை ஏமாற்ற இப்படி ஒரு போலியான நாடகத்தை அரங்கேற்றி கொண்டு இருக்கிறார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் நீட் கையெழுத்து இயக்கம் தொடங்கி இன்றோடு 50 நாட்கள் கடந்துவிட்டது.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “50 நாட்கள் – 50 லட்சம் கையெழுத்துகள்’ என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம், இன்றோடு 50 நாட்களை கடந்திருக்கிறது.
இணையத்தில் 56 லட்சம் – அஞ்சல் வழியே 16 லட்சம் என 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் நீட் அநீதிக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த கையெழுத்துகளை எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் சேலத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் ஒப்படைக்கவுள்ளோம்.
நீட் ஒழிப்புக்கான இந்த கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் – நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பேட்டால் அடித்து விடுவேன் மிரட்டிய பஞ்சாப் வீரர்… 2 போட்டிகளில் விளையாடுவதற்கு ஐசிசி தடை!