நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறிய விஜய்யின் கருத்து வரவேற்கத்தக்கது என ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூலை 3) கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பாஜக அரசு நீட் தேர்வை நடைமுறைப்படுத்திய நாள் முதலே தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், திமுக நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் இன்று (ஜூலை 3) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக மாணவர் அணி சார்பில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர்.
நீட் தேர்விற்கு விஜய் கண்டனம்
இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று (ஜூலை 3) நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்று, மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார்.
இதற்கு முன்பு பேசிய விஜய், “நீட் தேர்வால் பல்வேறு மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது” என்று பேசியிருந்தார்.
விஜய் பேச்சிற்கு ஆர்.எஸ்.பாரதி வரவேற்பு
இதையடுத்து, நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நீட் விலக்கு குறித்து உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். நீட் தேர்விற்கு எதிராக திமுக எடுத்த முடிவு ஒரு நல்ல முடிவு என்பதை இன்று அனைவரும் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் திமுக மட்டும் பேசிக்கொண்டிருந்த விசயத்தை தற்போது நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் பேசுகின்றன.
இன்று காலையில் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தாமாக முன்வந்து இந்த தீர்மானத்தை முழுமனதோடு ஆதரிப்பதாக கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது” என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”நீட் விலக்கு மட்டும்தான் உடனடித் தீர்வு” : ஒன்றிய அரசுக்கு எதிராக விஜய் பேச்சு!
படிப்படியாக உயரும் தங்கம், வெள்ளி விலை!