இறுதி நேரத்தில் தலையிட்டு மாணவர்களை ஆபத்தில் தள்ள விரும்பவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் திட்டமிட்டபடி செப்டம்பர் 1 ஆம் தேதி நீட் முதுநிலை கலந்தாய்வு நடைபெறும் என்பது உறுதியாகி இருக்கிறது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.
இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் நீட் முதுநிலை தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாளை வெளியிடாத மருத்துவ கல்விக்கான தேசிய தேர்வு வாரியத்தின் ( NBE ) முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், இவ்விவகாரத்தில் தேசிய தேர்வு வாரியத்திற்கு விடைத்தாள் வெளியிட உத்தரவிட வேண்டும், மேலும் வழிகாட்டு நெறிமுறை வெளியிட வேண்டும் என கேட்கப்பட்டு இருந்தது.
செப்டம்பர் 1ம் தேதி நீட் முதுநிலை கவுன்சிலிங் நடைபெறவுள்ள நிலையில் இவ்வழக்கில் சில விளக்கங்கள் தேவை என்பதால் வழக்கை அதற்கு முன்பு பட்டியலிட வேண்டும் என நீதிபதி டி.ஓய் சந்திரசுட் மற்றும் ஹிமா ஹோலி முன் முறையிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், செப்டம்பர் 1ம் தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நேரத்தில் நாங்கள் இவ்விவகாரத்தில் தலையிட்டு மாணவர்களை ஆபத்தான நிலைக்கு தள்ள விரும்பவில்லை என தெரிவித்தனர்.
மேலும் திட்டமிட்டபடி கவுன்சிலிங் நடைபெறட்டும் என்றும் கூறினர்.
உச்சநீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவினால் வரும் செப் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுநிலை கவுன்சிலிங்குக்கு தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது.
கலை.ரா
நீட்: மாணவிகளின் உள்ளாடையைக் கழற்றச் சொன்ன கொடுமை!