நீட் தேர்வை ரத்து செய்வதற்காக திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ எனும் கையெழுத்து இயக்கம் இன்று (அக்டோபர் 21) தொடங்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த இயக்கத்தின் முதல் கையெழுத்தாக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போரை மேற்கொண்டோம். அதே உறுதியுடன், இன்றைக்கு இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.
இதை மக்கள் இயக்கமாக கொண்டு சென்று நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்.
இந்தி திணிப்பு தொடங்கி இப்போது புதிய கல்விக் கொள்கை வரைக்கும் நம் கல்வி உரிமையை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று பாசிஸ்ட்டுகள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அவற்றை எதிர்த்து நாமும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏற்படும் பாதிப்பை புரிந்து கொள்ள மத்திய அரசு மறுக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தோம். அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக 21 மாதங்களாக காத்திருக்கிறது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
நீட் தேர்வால் அனிதா தொடங்கி ஜெகதீஸன் வரை 22 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த தற்கொலைகளை நிறுத்த வேண்டும். மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து இயக்கம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நீட் வந்தால் தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இன்று நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா?” என்று கூறி ஒரு முட்டையை எடுத்து காண்பித்தார் உதயநிதி ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், “முதுநிலை மருத்துவம் படிக்க பிஜி நீட் தேர்வில் எத்தனை பெர்சண்டைல் எடுக்க வேண்டும் என்று தெரியுமா? முட்டை பெர்சண்டைல். பிஜி நீட் தேர்வில் முட்டை பெர்சண்டைல் வாங்கினாலே போதும், மருத்துவ கல்லூரியில் சேர தகுதியானவர்கள் என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
அதாவது, சும்மா போய் நீட் எழுதிட்டு வந்தாலே போதும், அதன்பின் பணம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்க முடியும். இதெல்லாம் எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?. உலகத்தில் இந்த மாதிரி எங்காவது நடக்குமா?” என கேள்வி எழுப்பினார் உதயநிதி ஸ்டாலின்.
அதிமுகவுக்கு அழைப்பு
அதிமுகவை குறிப்பிட்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீங்கள் பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் போதுதான் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
இப்போதுதான் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டீர்களே. அதுவும் தமிழ்நாட்டின் உரிமையை காக்க தான் பாஜக கூட்டணிலிருந்து வெளியேறினோம் என்றூ சொல்கிறீர்களே.
எனவே தமிழ்நாட்டின் உரிமைக்காக, நீட் விலக்குக்காக குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் வகையிலான இந்த கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவும் பங்கெடுக்கலாம்.
இது ஏதோ திமுகவின் பிரச்சினை என்று நினைக்க வேண்டாம், இது தமிழ்நாட்டின் பிரச்சனை. தமிழ்நாட்டு உரிமையைக் காக்க வேண்டும் என்ற உணர்வோடு அதிமுக மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்” என அழைப்பு விடுத்தார்.
அஞ்சல் அட்டை மூலமாக மட்டுமன்றி, https://banneet.in/sign எனும் இணையதளத்தின் வாயிலாகவும் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார் உதயநிதி.
2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு இன்னும் கட்ட கூட தொடங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக ஒற்றை செங்கல்லை வைத்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
இன்று நீட் பிஜி பெர்சண்டைல் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் வகையில் முட்டையை கையில் வைத்து மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
பிரியா
“பாகிஸ்தான் ஜிந்தாபாத் கூடாது”: பெங்களூரு போட்டியில் வெடித்த சர்ச்சை!
“துர்கா எந்த கோயிலுக்கு போறாங்கனு பார்க்கறதுதான் பாஜக வேலை” : ஸ்டாலின்
லியோ : உண்மையில் ரூ.148.5 கோடி வசூலித்ததா?