ராஜன் குறை
அரியலூர் மாணவி அனிதாவின் அகால மரணம் நிகழ்ந்து, தமிழ்நாடு முழுவதும் கொந்தளித்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அனிதாவின் மரணத்திற்கு, அவரது தற்கொலைக்கு அல்லது நிறுவனக் கொலைக்குக் காரணம் அவரது மருத்துவக் கல்விக் கனவு நீட் தேர்வால் நிராசையானதுதான்.
ஒரு கூலித்தொழிலாளியின் மகளான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா, பள்ளி இறுதித் தேர்வில் 1176/1200 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். தமிழ்நாட்டில் அதுவரை பின்பற்றப்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி சேர்க்கை முறை பின்பற்றப்பட்டிருந்தால், அவருக்கு அவசியம் இடம் கிடைத்திருக்கும். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஒரு அகில இந்திய நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்குத்தான் மருத்துவக் கல்லூரி இடம் கிடைக்கும் என்பதால் அனிதாவின் வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டது.
அந்தத் தேர்வின் பெயர்தான் நீட் – அதாவது ஆங்கில முதல் எழுத்துகளின் சுருக்கம் (NEET – National Eligibility cum Entrance Test). அனிதா மரணம் மற்றும் மாநிலம் தழுவிய போராட்டங்களுக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் எல்லாம் நீட் தேர்வை ரத்து செய்ய ஆவண செய்வோம் என்று சொன்ன திராவிட முன்னேற்றக் கழகமே பெரும் வெற்றிகளை ஈட்டியது. நீட் தேர்வுக்கு எதிராக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியது.
தி.மு.க 2021ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தவுடன் நீட் தேர்வு குறித்து ஆராய ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு அனைத்து தரப்பினரிடமும் கருத்துக் கேட்டு ஒரு முழுமையான ஆய்வறிக்கையை, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை, அது நன்மை பயக்கவில்லை என்பதை விளக்கிய அறிக்கையை அளித்தது. அதனடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து போராட்டங்களுக்குப் பிறகு அவர் அதைத் திருப்பி அனுப்ப, மீண்டும் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் அந்தத் தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.
இதெல்லாம் வரலாற்றுத் தகவல்களாக இருக்க, இந்த மாதம் நீட் தேர்வுகளில் பல்வேறு இடங்களில் நடந்துள்ள ஏராளமான குளறுபடிகள், ஊழல்கள், முறைகேடுகள் வெடித்துக் கிளம்பியுள்ளன. இந்த தேர்வினை நடத்தும் தேசியத் தேர்வு முகாமை (National Testing Agency) நிர்வாகக் குளறுபடிகளால் தத்தளிப்பது, ஒன்றிய அரசு இந்த அமைப்பைச் சீர்செய்யும் திறனின்று இருப்பதும் அம்பலமாகியுள்ளது. நாடெங்கும் கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வியையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் அமைப்பில் நிர்வாகச் சீர்கேடுகளும், ஊழலும் மலிந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வை நீக்கக் கோரும் தமிழ்நாட்டின் குரலுடன் நாடெங்கிலும் முக்கிய எதிர்க்கட்சிகளின் குரல்களும் இணைந்துள்ளன. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை வழக்கம் போல ஆளும்கட்சி ஏற்க மறுத்து வருகிறது. ஆனால், நீட் எதிர்ப்பு பொது மன்றத்தில் நாடெங்கும் வலுத்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் தனது நீட் விலக்கு சட்டத்தினை அனுமதிக்கக் கோரி தீர்மானம் போட்டுள்ளது.
இங்கே பல முக்கிய கேள்விகள் எழுகின்றன. எதனால் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசு ஏழாண்டுகளுக்கும் மேலாக நீட் தேர்வு பிரச்சினையில் பிடிவாதம் காட்டி வருகிறது? எதனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பொருட்படுத்த மறுக்கிறது? அரசின் இவ்வாறான போக்கு நம் மக்களாட்சி குறித்து புலப்படுத்தும் உண்மைகள் என்ன?
இந்திய மக்களாட்சியின் மூன்று முக்கிய பலவீனங்களை நாம் நீட் தேர்வு தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
- தொடரும் வர்ண பாகுபாடு;
- புறக்கணிக்கப்படும் பொதுமன்ற கருத்துக்களம்;
- சாரமற்ற மரவடிவ பன்மைத்துவம்.
இவை மூன்றுமே நீட் பிரச்சினையில் ஒன்றோடொன்று ஆழ்ந்த தொடர்புள்ளவை என்றாலும், நாம் இவற்றை பிரித்தறிவது அவசியம்.
தொடரும் வர்ண பாகுபாடு
வர்ண பாகுபாடு எங்கே தொடர்கிறது, இப்போதுதான் யாரும் எந்த வேலைக்கும் செல்லலாமே என கேட்டுவிடுவார்கள். ஆனால், புள்ளி விவரங்கள் இன்னும் பாகுபாடு அழிந்திடவில்லை என்று தெளிவாகச் சொல்கின்றன. செல்வாக்கு மிக்க பதவிகளில், பணிகளில் நான்காம் வர்ணத்தவராக இருந்த உழைக்கும் மக்கள், தற்போது பிற்படுத்தப்பட்டவர்களாக கணக்கிடப்படுபவர்கள், அவர்ணர்கள் எனப்படும் தலித் ஜாதியினர் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள்.
இதற்கான காரணத்தை நாம் ஆராயும்போது “கலாசார மூலதனம்” என்ற மானுடவியல் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது எப்படித் தொழிலில், வர்த்தகத்தில் ஈடுபட பொருளாதார மூலதனம் வேண்டுமோ, அதேபோல கல்வியில் முன்னணியில் இருக்க கலாசார மூலதனம் உதவுகிறது. அதென்ன கலாசார மூலதனம்?
உதாரணமாக ஒரு கலாசார மூலதனம் கொண்ட சிறு குழந்தை வளரும்போதே வீட்டில் செய்தித்தாள்களை எடுத்து கிழிக்கிறது. அதற்குப் படிக்கத் தெரியாவிட்டாலும் அதிலுள்ள படங்களைப் பார்க்கிறது. செய்தித்தாள் என்ற ஒன்று இருப்பது அதன் ஆழ்மனத்தில் பதிந்து விடுகிறது. அந்தக் குழந்தை பெரியவர்கள் ஆங்கிலத்தில் பேசிக் கேட்கிறது. அப்போது அதன் ஆழ்மனதில் ஆங்கிலம் பரிச்சயமாகிவிடுகிறது. கணித வாய்ப்பாடுகளை, கூட்டல் கழித்தலை வீட்டிலேயே அது பள்ளி செல்லும் முன்னமே குடும்பத்தில் கற்றுக்கொள்ள முடிகிறது. எல்லா குழந்தைகளுக்குமே குடும்பத்தில் சில திறன் பயிற்சிகள் பெற்றாலும், போட்டித் தேர்வுக்கான திறன் என்பது குறிப்பிட்ட வகையான கலாசார மூலதனம் சார்ந்தது.
மாணவப் பருவத்தில் பெற்றோரும், உறவினரும் உயரதிகாரிகளாக, நீதிபதிகளாக, பேராசிரியர்களாக, மருத்துவர்களாக இருப்பதைப் பார்க்கும்போது அதன் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. அதன் கற்றலுக்கு உகந்த சூழலை குடும்பம் உருவாக்குகிறது. பெற்றோரும், உற்றோரும் பாடம் சொல்லித் தருகிறார்கள். நாட்டு நடப்புகளை பேசுகிறார்கள். இதுதான் கலாசார மூலதனம். வறுமையிலேயே வாடினால்கூட கலாசார மூலதனம் உள்ள குடும்பத்துக் குழந்தைகள் கல்வியில் சுலபத்தில் போட்டியிட்டு முன்னேற வாய்ப்பு அதிகம் அமைகிறது.
ஆனால், அனிதா போன்ற பெண்ணால் பள்ளிப்பாடங்களை உழைத்துப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற முடிகிறது. ஆனால், புதிதாக ஒரு போட்டித் தேர்வை அறிமுகப்படுத்தும்போது அதற்கான பயிற்சி இல்லாமல் அவரால் அதில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், கலாசார மூலதனம் கொண்டவர்கள் சுலபத்தில் அந்த நுழைவுத் தேர்வினை எழுதத் தேவையான திறன்களை பெற்றுவிடுகிறார்கள். எண்பதுகளில் சென்னையில் ஒரு நர்சரி பள்ளி விளம்பரத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பிலிருந்தே பொறியியல் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக விளம்பரம் பார்த்தேன். அதாவது பொதுக்கல்வி வேறு, நுழைவுத்தேர்வு பயிற்சி வேறு. அதனால்தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் முதல் தலைமுறை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் போன்ற கலாசார மூலதனம் இல்லாத மாணவர்களை வடிக்கட்டி புறமொதுக்கும் செயலை செய்கின்றன.
இதை நன்கு உணர்ந்ததால்தான் கலைஞர் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு அவசியமில்லை என்று நீக்கினார். அது ஏராளமான எளிய சமூகப் பின்னணி கொண்டவர்கள் மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கியது. அதனால், எப்படி தமிழ்நாட்டின் பொது சுகாதாரம் மேம்பட்டுள்ளது என்பதை கலையரசன், விஜய்பாஸ்கர் ஆகிய பொருளாதார ஆய்வாளர்கள் தங்கள் Dravidian Model நூலிலே விளக்கியுள்ளார்கள்.
புறக்கணிக்கப்படும் பொதுமன்ற கருத்துக்களம்
மக்களாட்சியை வழிநடத்துவது என்பது பப்ளிக் ரீசன் (Public Reason) என்ற பொதுமன்ற கருத்துக்களமாகத்தான் இருக்க வேண்டும். அதன் பொருள் என்னவென்றால் அரசு மாற்றுக் கருத்துகள் அனைத்தையும் செவிமடுக்க வேண்டும்; அவற்றுடன் உரையாட வேண்டும் என்பதுதான். மக்களாட்சி என்பது பெரும்பான்மைவாதமல்ல. சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுவிட்டால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல.
நீட் தேர்வுக்கு எதிராக எவ்வளவோ கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் கோர்வையாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் பெருமளவில் சுரண்டிக் கொழுப்பதும், வரைமுறையின்றி பொருளீட்டுவதும், பெற்றோர்கள் மிகக் கடினமான பொருளாதார நெருக்கடியிலும் இந்தப் பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்தி தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதும் அனைவரும் நன்கறிந்த உண்மைதான். எப்படியாவது தங்கள் குழந்தைகள் மருத்துவராக வேண்டும் என்ற விழைவே அவர்களைச் செலுத்துகிறது.
அப்படிப்பட்ட கோடிக்கணக்கான பெற்றோரின் உழைப்பினை, மாணவர்களின் உழைப்பினை கேலிக்கூத்தாக்குகின்றன நீட் தேர்வு ஊழல்களும், முறைகேடுகளும். நாடே கொந்தளிக்கும் இந்த பிரச்சினையை ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கிறது அரசு? எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டால் என்ன பெரிய இழப்பு ஏற்பட்டுவிடும்? அவர்கள் விமர்சனங்களை கேட்டு பதில் கூற கடமைப்பட்டதுதானே அரசு?
நாடாளுமன்றத்திலும், பொதுமன்றத்திலும் ஒலிக்கும் குரல்களை ஆள்பவர்கள் புறக்கணிப்பது மக்களாட்சியல்ல. பெரும்பான்மைவாதம். ஒரு மாநில சட்டமன்றம் சட்டம் இயற்றி அனுப்பினால் அதனை புறக்கணிப்பது, அதற்கு உரிய மரியாதை அளிக்காமல் இருப்பது மக்களாட்சி நெறிமுறைகளை குழிதோண்டிப் புதைப்பதாகும்.
சாரமற்ற, மரவடிவ பன்மைத்துவம்
ஒரு மரம் என்பது பூமிக்கடியில் வேர் பரப்பி நின்று, மேலே பல கிளைகளைப் பரப்புவதாகும். ஒரு தேசத்தின் பன்மைத்துவம் என்பதை நாம் மரத்தின் கிளைகளைப்போல பல்வேறு மொழிகளும், கலாசாரங்களும் ஒற்றை மரத்திலிருந்து கிளைப்பதாக உருவகம் செய்வது ஆபத்தானது. அவ்வாறு செய்வதை Arboreal Pluralism என்று குறிப்பிடுவார் அரசியல் சிந்தனையாளர் வில்லியம் கனோலி. இத்தகைய பிழைபட்ட பன்மைத்துவத்தில் நாம் பல்வேறு மக்கள் தொகுதிகளின் தனித்துவங்களை போதுமான அளவு புரிந்துகொள்ளாமல் அவையெல்லாம் ஒற்றை மரத்தின் கிளைகள் என்று கூறிவிடுகிறோம்.
இதற்கு மாறாக, நாம் பல்வேறு மக்கள் தொகுதிகளை ஒரு பரப்பில் பற்றிப் படரும் தனித்த வேர்களைக் கொண்ட செடிகளாகக் காண வேண்டும். ஒவ்வொரு செடியும் அதன் வேரின் வலுவிற்கேற்ப வளரும். அச்செடிகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கலாம். அவற்றின் மலர்களுக்கிடையில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையால் மேலும் பல செடிகள் உருவாகலாம். ஆனாலும் ஒவ்வொரு செடியும் தனித்துவம் கொண்டதாகும்.
இந்திய மக்களாட்சியின் உயிர்நாடியான கூட்டாட்சி தத்துவம் மரம், கிளைகள் என்ற வடிவத்தில் புரிந்துகொள்ளப்படுவதால்தான் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. உதாரணமாக கல்வியும் மாநில பட்டியலில் உள்ள துறைதான். சுகாதாரமும் மாநில பட்டியலில் உள்ள துறைதான். ஆனால், இவற்றுக்கு இடையில் தேசிய மருத்துவ ஆணையம் என்ற ஒன்று யார் மருத்துவராகலாம் என்ற அனுமதி வழங்கும் உரிமையைப் பெற்றுள்ளதாகிவிடுகிறது. கல்வியும், சுகாதாரமும் மாநில அரசுகளின் துறைகள் என்னும்போது யார் மருத்துவர் என்று சான்றளிப்பதும் மாநில அளவிலான ஆணையங்களாகத்தானே இருக்க வேண்டும்?
இந்திய மாநிலங்கள் பலவற்றின் மக்கள்தொகை பெரும்பாலான உலக நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமானது. அப்படி இருக்கும்போது நமது கூட்டாட்சி அங்கீகரிக்கும் பன்மை என்பது முழுமையாக தனித்துவங்களை அங்கீகரிக்கும் பன்மையாக இருக்க வேண்டும். இந்தத் தனித்துவம் என்பது பன்னெடுங்கால வரலாறு சார்ந்தது என்பது மட்டுமல்ல. சமகால வரலாற்றில் ஒவ்வொரு மக்கள் தொகுதியும் தங்கள் வளர்ச்சிப் பாதைகளை சமைத்துக் கொள்கின்றன என்பதுதான்.
கல்விக்கும், சுகாதாரத்திற்கும் தமிழ்நாடு கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. குறிப்பாக திராவிட இயக்கக் கட்சிகள் ஆட்சி செய்யத் துவங்கிய பிறகு கடந்த ஐம்பதாண்டுகளில் கல்வி மற்றும் சுகாதாரத்தில் பெரும் பாய்ச்சல்கள் நடந்துள்ளன. சாமானிய மக்களில் இருந்தே மக்கள் பிரதிநிதிகளும், ஆட்சியாளர்களும் உருவாகும்போது எப்படி கல்வி, சுகாதாரம் போன்ற மக்களுக்கு நெருக்கமான துறைகள் ஏற்றம் பெறுகின்றன என்பது முக்கியமானது.
நீட் தேர்வு பிரச்சினை மிக முக்கியமான ஒரு கேள்வியை இந்திய மக்களாட்சி முன் வைத்துள்ளது. ஒன்றிய அரசு, மாநில அரசுகள் இடையிலான உறவு எப்படி இருக்கப்போகிறது என்பது ஒன்றிய அரசு இந்தச் சிக்கலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதிலேயே அடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சியை பாதிக்கும் விதத்தில் ஒன்றிய அரசு செயல்படுவது ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கும், அதற்கு ஆதாரமான மக்களாட்சி விழுமியங்களுக்கும் நல்லதல்ல.
தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதும், கல்வி முழுவதும் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதுமே இந்திய மக்களாட்சியின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதுக்கும் அவரு தான் காரணமா? அப்டேட் குமாரு
T20 World Cup: இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த பரிசு!
கெத்து காட்டும் அஜித்…. விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் எப்படி?
விக்கிரவாண்டி: எம்.ஜி.ஆர். திட்டமிட்ட 13% – அதிமுக வாக்குகளை குறிவைக்கும் ராமதாஸ்
Neenga nalla Thiruttu DMK jalra Thane. Neet exam la irunthu exception vanguvom nu poi solli thalam potutu irukura DMK ku nalla support pandringa Rajan. Avangalum thiruntha mattanga neengalum DMK ku sombadikuratha matha mattinga makkalum kasa vangitu ootu podratha nirutha mattanga.