NEET exam right or wrong

நீட் தேர்வை எப்படி அணுகுவது?

அரசியல் சிறப்புக் கட்டுரை

நா.மணி

நீட் தேர்வு முறைகேடு நாட்டை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடக்கும் நாளன்று நடத்தப்படும் கண்டிப்புகள் அதிர்ச்சி அடையச் செய்யும். அவ்வளவு கண்டிப்புகளுக்கு மத்தியில் நடக்கும் தேர்வு முறைகேடுகள், மதிப்பெண் வழங்கிய விதம் போன்றவை தீவிர பேசுபொருளாக மாறி உள்ளது. மறுபுறம் நீட் விலக்கு கோரிக்கையை காத்திரமாக முன்னெடுத்து வந்த அணி, நாற்பதையும் தமதாக்கி அதற்கான அறப்போரை வரும் நாடாளுமன்றத்தில் தீவிரமாக முன்வைக்க உள்ளது.  நீட் சரியான தேர்வு என்றால் மட்டுமே அதன் முறைகேடுகள் பற்றி மிக ஆழமாகப் பேச வேண்டும். நீட் தேர்வு  சரியான தேர்வு இல்லை என முடிவெடுத்தால் தற்போதைய முறைகேடு குறித்த வாதங்களை காரணங்கள், தீர்வுகள் மற்றும் தவறுக்கு தண்டனைகள் என்ற அளவில் முடித்துக் கொள்ளலாம்.

நீட் மீதான இரண்டு கோணங்கள்

நீட் தேர்வு சரியா, தவறா என்பதை இரண்டு கோணங்களில் அணுகலாம். ஒன்று நீட் தேர்வின் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பதை கடந்த ஏழு ஆண்டுகள் அனுபவத்திலிருந்து ஆராய்ந்து அறியலாம். மற்றொன்று நீட் தேர்வு அமலாக்கத்திற்கு முன்னரே நீட் தேர்வு கூடாது என்பதற்காக வைக்கப்பட்ட வாதங்கள் அடிப்படையில் ஆராயலாம். 2010 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் தேசிய மருத்துவ கவுன்சிலாக இருக்கும் போதே, சட்டமே ஆக்காமல் விதிகளை மட்டும் உருவாக்கி நீட் தேர்வை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த தேர்வு 2013 ஆம் ஆண்டு மூன்றுக்கு இரண்டு நீதிபதிகள் தீர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. நீட் தேர்வு சரியென்று தீர்ப்பளித்த அந்த மூன்றாவது நீதிபதி தலைமையிலான அமர்வு 2016 ஆம் ஆண்டு நீட் தேர்வை அமலாக்கம் செய்தது.

கீழ்க்காணும் காரணங்களுக்காக நீட் தேர்வு அவசியம் எனக் கூறியது.

  1. தகுதிஅடிப்படையில் சேர்க்கை,
  2. தேர்வில்வெளிப்படை தன்மை,
  3. கட்டாயநன்கொடை இன்றி மருத்துவ சேர்க்கை,
  4. ஒருபடிப்புக்கு பல நுழைவுத் தேர்வுகள் கூடாது.

நீட் தேர்வால் உச்சநீதிமன்றத்தின் நோக்கம் நிறைவேறியதா?

2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதி அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறுகிறது. இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த தகுதியானவர்கள் யார்? இந்த தகுதியைத் தான் உச்சநீதிமன்றமும் தேசிய மருத்துவ ஆணையமும் அல்லது இந்திய அரசும் விரும்புகிறதா என்ற கேள்வியை வலுவாக இந்த தருணத்தில் எழுப்ப வேண்டி உள்ளது.

நீட் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை சேர்க்கப்பட்ட மாணவர்களில், அறுதிப் பெரும்பான்மை மாணவர்கள் நகர்ப்புற வர்க்கத்தினர். எந்த சாதி எந்த மதமாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் வசதி படைத்தவர்கள். நீட் பயிற்சிக்காக மட்டுமே பல லட்சங்களை செலவழிக்கவும், பல ஆண்டுகளை நீட் தேர்வு பயிற்சிக்காக செலவிடவும் தயாராக இருப்பவர்கள். இவர்கள் தகுதி பெறுவது மட்டுமே தகுதியா? நீட் தேர்வு பயிற்சிக்கு பணம் இல்லாமல், கணினி வசதி இல்லாமல், இணையப் பயன்பாடு தெரியாத காரணத்தால் மட்டுமே நீட் தேர்வில் கோட்டை விட்டவர்கள் தகுதியற்றவர்களா?

NEET exam right or wrong

எத்தனை லட்சம் ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வு வழியாக தகுதி இழக்க செய்யப்பட்டு இருப்பார்கள்? இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டாமா? அடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் மட்டுமே தகுதி அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள், நெகடிவ் மதிப்பெண் எடுத்தவர்கள் கூட  சேர்க்கப்படுகிறார்கள். தகுதி அடிப்படையில் சேர்க்கை எனில், அது அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சமச்சீர் தகுதி இல்லையா?

தற்போது நடைபெற்று வரும் முறைகேடு புகார்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? அதன் பரிணாமம் என்ன? எந்த வகையான விசாரணை மூலம் அது வெளி உலகிற்கு தெரியும்? அதனை மக்கள் எப்படி நம்பப் போகிறார்கள்? ஒரு விடைத் தாளுக்கு முப்பது லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது என்ற புகார்கள் வழியாக எந்த வகையில் வெளிப்படைத் தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுவதை யாராலும் தடுக்க முடியாது. தனியார் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை ஒழிந்து விட்டது. ஆனால் கட்டாய நன்கொடைக்குப் பதிலாக கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வாங்கும் மறைமுகக் கட்டணங்கள், விடுதிகளில் வசூலிக்கப்படும் கட்டணக் கொள்ளை, இதன் நியாய தர்மம் அறிந்தவர்கள் கட்டாய நன்கொடை ஒழிந்து விட்டது என்று ஏற்றுக் கொள்வார்களா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே தமிழ்நாட்டில் நடந்திருந்த மாற்றம்

தமிழ்நாட்டில் 85 விழுக்காடு மருத்துவ மாணவர் சேர்க்கை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வந்தது. இந்த சேர்க்கை முறையில் உச்சநீதிமன்றம் கூறிய எல்லா நோக்கங்களும் நிறைவேறி வந்தது. சமூக நீதி நிலை நாட்டப்பட்டது. கூட்டாட்சிக்கு மதிப்பளிக்கப் பட்டிருந்தது. தேவை என்னவென்றால், தனியார் கல்லூரிகளின் சேர்க்கையை முறைப்படுத்த அதன் கட்டாய நன்கொடை, கட்டாய கட்டணங்களை ஒழிக்க ஒரு ஏற்பாடு. இதற்கு ஏன் மலையைத் தோண்டி எலியைப் பிடிக்க வேண்டும்?

நீட் தேர்வு கட்டாயம் என்ற பேச்சு எழுந்த காலத்திலிருந்து நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தமிழ்நாட்டை ஆண்ட, ஆண்டு வரும் கட்சிகள் வைத்த வாதங்கள், தற்போது ஆளும் கட்சியான திமுக மேற்கொண்டு வரும் காத்திரமான செயல்பாடுகள் ஆகியவை தற்போது அதிக கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இதனையும் மதிப்பீட்டிற்கு உட்படுத்துவோம்.

பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் நீட்டிற்கு எதிரான வாதங்கள்

“பன்னிரெண்டாம் வகுப்பு படித்து மருத்துவக் கல்லூரியில் சேர வரும் ஒரு மாணவன் தரமான மருத்துவரா என ஒரு மூன்று மணி நேர தேர்வின் வழியாக கண்டறிய முடியாது. மருத்துவக் கல்வியின் தரமும், மருத்துவக் கல்லூரி தரும் தரமான பயிற்சியுமே ஒரு மாணவனை தரமான மருத்துவராக மாற்றும். எனவே மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையையும் தரமான மருத்துவரையும் தனியாக பிரித்துப் பார்க்க வேண்டும்.

நீட் தேர்வு ஏழைகளுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. பணக்கார, நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவானது. ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கக் கூடியது. இது ஒன்றியத்தின் கூட்டாட்சிக்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலமும் அதற்கான பாடத்திட்டங்களையும் வாரியங்களையும் கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய பாடத்திட்ட வாரியத்தைச் சார்ந்து நீட் தேர்வு நடப்பது, இதர மாநில வாரியங்களின் பாடத்திட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும். மத்திய அரசானது மாநில கல்வி வாரியங்களை புறக்கணிப்பதற்கு ஒப்பானது. எல்லோரும் மத்திய பாடத்திட்டத்தை நோக்கி வாருங்கள் என மறைமுகமாக அழுத்தம் கொடுப்பதற்கு சமம். மேலும் இந்த செயலானது காளான்களைப் போல நாடு முழுவதும் உருவாகி வளர்ந்து வரும் நீட் தேர்வு பயிற்சி மையங்களின் சுரண்டலுக்கும் கொள்ளை லாபத்திற்குமே வழிவகை செய்யும்.

பர்சன்டைல் முறை சேர்க்கை என்ற பெயரில் மிகமிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களும் தனியார் கல்லூரிகள் வழியாக மருத்துவ மாணவர் சேர்க்கை பெற்று விடுகிறார்கள். இதனை முற்றிலும் தர அடிப்படையிலான மருத்துவர் சேர்க்கை என்று சொல்வது போலியானது. தரம், வெளிப்படைத் தன்மை, ஊழலின்மை மற்றும் கட்டாய நன்கொடை இல்லாமலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. ஒருவேளை நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை வந்தால் மேற்படி காரணங்களால் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்.”

மேற்கண்டது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 92வது சுகாதார மற்றும் குடும்ப நல நிலைக் குழு அறிக்கையில், அப்போதைய கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் மருத்துவர் காமராஜ் எழுத்துப்பூர்வமாக கொடுத்த வாக்குமூலமாகும்.

NEET exam right or wrong
காமராஜ்

அந்த  நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர் இதனை முன்வைத்து, அதிருப்தி குறிப்பிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்திருக்கிறார். இந்த வார்த்தைகள் காமராஜின் வார்த்தைகள் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களின் வார்த்தைகள். பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் கூட. இதன் ஒவ்வொரு வார்த்தையும் இன்றும் அப்படியே பொருந்துவதாக உள்ளது. இந்த வார்த்தைகளில் பிழையில்லை.

கூட்டாட்சிக்கு வலுசேர்க்கும் பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரையை உதாசீனம் செய்த பாராளுமன்றம்

இதே பாராளுமன்ற நிலைக்குழு கொடுத்த ஓர் பரிந்துரை, ஒட்டுமொத்த நீட் தேர்வு பிரச்சனைக்கு தீர்வைத் தருகிறது. ஆனால் அது இன்றுவரை கண்டுகொள்ளப்படவில்லை. “மருத்துவக் கல்வியைத் தரப்படுத்த ஒரு தேசிய அளவிலான தேர்வு வேண்டும். அந்த தேசிய அளவிலான தேர்வை நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதனை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களை விட்டுவிடலாம். ஏற்றுக் கொள்ளும் மாநிலங்களுக்கு மாத்திரம் நடத்தலாம். சில மாநிலங்கள் பின்னர் சேர்ந்து கொள்ள இசைவு தெரிவித்தால் அப்போது அவற்றை இணைத்துக் கொள்ளலாம்” இதுவே அந்தப் பரிந்துரை.  இது கூட்டாட்சி மாண்பை காக்கும் முடிவு. நீட் தேர்வு பிரச்சினைக்கு தீர்வு காண அந்த பரிந்துரைக்கு மதிப்பளிக்க வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:

NEET exam right or wrong by Professor N Mani
நா.மணி, பேராசிரியர் மற்றும் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர், பொருளாதாரத்துறை, கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – காளான் சமைக்கப் போறீங்களா… இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

நீட் பிஜி நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு: மாணவர்கள் ஷாக்!

குழப்பத்தில் எடப்பாடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி பதில்!

மாநகராட்சி, நகராட்சி சாலைகளை சீரமைக்க ரூ.987 கோடி: கே.என்.நேரு

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் : எச்.ராஜா கைது!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *