“நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, அதிமுக ஆட்சியில் தொடங்கிய இலவச பயிற்சி மையங்களை முன்மாதிரியாகக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்த, சென்னை திருமுல்லைவாயில் இந்திரா நகரைச் சேர்ந்த மாணவி லக்ஷ்மணா ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை விட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 9) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? அல்லது காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் கொடுமை தாங்காமல் வெந்து மடியும் மக்கள், இந்த திமுக ஆட்சி என்று ஒழியும் என ஏங்கி தவிக்கின்றனர்,
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று வாய்ச்சவடால் விட்டது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு, மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதற்கும், பெற்றோர்களின் துயரத்திற்கும் இந்த அரசின் முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கிய இலவச பயிற்சி மையங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு,
மாணவச் செல்வங்களுக்கு பயிற்சியையும், அதனுடன் மனப் பயிற்சியையும் சேர்த்து அளிக்க வேண்டும் என திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
நீட் தேர்வு: உத்தரப் பிரதேசம் முதலிடம் – தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு!