நீட் தேர்வு முறைகேடு… ஜூன் 21ல் காங்கிரஸ்… ஜூன் 24ல் திமுக போராட்டம்!

Published On:

| By Kavi

நீட் தேர்வுக்கு எதிராக ஜூன் 24ஆம் தேதி திமுக மாணவரணி போராட்டம் நடத்தவுள்ளது.

கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக நாடு முழுவதும் புகார்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவிகிதம் யாராவது சுணக்கமாகவோ அல்லது அலட்சியமாகவோ இருந்தால் கூட முழுமையாக ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நீட் முறைகேடு தொடர்பாக மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் 2 வாரத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரும் ஜூன் 21ஆம் தேதி நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அனைத்து மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் திமுகவும் போராட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட தேர்வு.

சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை சமத்துவம் இல்லாத தேர்வு முறை கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கக்கூடிய தேர்வு முறை அவர்களது கல்வி உரிமைக்கு தடை போடும் தேர்வு முறை அவர்களது மருத்துவக் கனவைச் சிதைத்து,

“நீ டாக்டர் ஆக முடியாது” என்றும், “உனக்குத் தகுதியில்லை” என்றும் கூறி, தடுப்புச் சுவர் எழுப்புகிறது.

நீட் தேர்வு என்பதே ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை.

ஆள்மாறாட்டம் செய்வது வினாத் தாள்களை திருடுவது – விடைத்தாள்களை மாற்றி வைப்பது – மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் என்று இத்தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது.

இதனை முன்பே அறிந்ததால் தான் தி.மு.க. நீட் தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது.

இந்த தேர்வை கண்டித்து வரும் ஜூன் 24ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சிவகார்த்திகேயன் படத்தால் போட்டி போட்டு வியாபாரம் ஆன பிரபாஸின் ’கல்கி’!

’இந்த பஸ்களில் ஏறாதீங்க’ : வெளிமாநில ஆம்னி பஸ் பட்டியல் வெளியிட்ட போக்குவரத்துத் துறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel