கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கழற்ற சொன்ன விவகாரம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கேரள உயர்க் கல்வித் துறை அமைச்சர் பிந்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தி விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடரின் 2ஆம் நாள் அமர்வு இன்று (ஜூலை 19) காலை தொடங்கியது. அப்போது அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்பட்டது. அதேசமயத்தில் நேற்று கொல்லத்தில் நீட் தேர்வின் போது தேர்வு அறைக்குள் நுழையும் முன் உள்ளாடைகளை கழற்றுமாறு மாணவிகளை கட்டாயப்படுத்திய சம்பவம் தொடர்பாக விவாதிக்க மக்களவையில் கேரளாவைச் சேர்ந்த என்.கே பிரேமச் சந்திரன் எம்.பி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார்.
அதுபோன்று விலைவாசி, பணவீக்கம், சிலிண்டர் விலை உயர்வு, வேலையின்மை, அக்னிபாத் திட்டம், அரிசிக்கு ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக இரு அவைகளிலும் பாதகைகள் ஏந்தி எதிர்கட்சி எம்பிக்கள் அமளியிலும் ஈடுபட்டனர். அதன் காரணமாக முதலில் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மக்களவையும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா