நீட் விலக்கு மட்டுமே தற்கொலையைத் தடுக்கும்: அன்புமணி

அரசியல்

“நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது மட்டும்தான் மாணவச் செல்வங்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று (செப்டம்பர் 7) இரவு வெளியிடப்பட்டன. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

17.64 லட்சம் பேர் தேர்வை எழுதியதில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 56.30 சதவீதம் பேர் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 30வது இடமும், ஹரிணி 702 மதிப்பெண் பெற்று 43வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டினைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சென்னை திருமுல்லைவாயில் இந்திரா நகரில் வசித்து வரும் மாணவி லக்ஷ்மணா ஸ்வேதா அதிகாலை 3:30 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று (செப்டம்பர் 8) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லக்சனா ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு முடிவு வெளியாகும்போதே என்ன நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டேனோ அது நடந்துவிட்டது வேதனையளிக்கிறது. நீட் தோல்வியைக் கண்டு மாணவர்கள் துவளக்கூடாது.

மன உறுதியுடன் செயல்பட்டு மீண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற 234 நாட்கள் ஆயின.

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 129 நாட்களாகும் நிலையில், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது மட்டும்தான் மாணவச் செல்வங்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றும்.

எனவே, நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று, மாணவச் செல்வங்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

தொடரும் நீட் மரணம்  : சென்னை மாணவி தற்கொலை!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on “நீட் விலக்கு மட்டுமே தற்கொலையைத் தடுக்கும்: அன்புமணி

  1. 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனரே, உங்களோட சுயலாபத்துக்காக மாணவியின் தற்கொலையை அரசியல் ஆக்காதீர்கள். 10, +2 மாணவ மாணவிகள் கூடத்தான் தற்கொலை செய்கிறார்கள், உடனே 10 மற்றும் +2 பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *