முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், நேற்று (செப்டம்பர் 1 ) மாதம் ரூபாய் 1000 உரிமைத்தொகை கொடுப்பதற்காக நிதியை ஓரளவுக்கு சரி செய்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாக விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று (செப்டம்பர் 1) வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
‘சரக்கை’ அதிகம் விற்று பலரின் விதியை முடித்து, குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகை தேவையா?
மது விலக்கை நடைமுறைப்படுத்துங்கள். பல லட்சம் குடும்பங்கள் சிறப்பாக வாழும் என்று கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக இலவசங்கள் மக்களின் வாழ்வில் வளர்ச்சியை ஏற்படுத்தியதா? இல்லையா? என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.
இதில் இலவசங்கள் தேவையில்லை என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விவாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இருவருக்கும் வார்த்தை போராக மாறியிருக்கிறது.
இந்நிலையில் , பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளது அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், “நிதி நிலை சரியானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தேர்தலுக்கு முன்னர் ‘கஜானா காலி’, நிதிநிலை சரியானவுடன் தருகிறோம் என்று ஏன் சொல்லவில்லை?.
இந்த வருடம் முதல் காலாண்டில் தமிழக அரசின் வருவாயில் மது விற்பனை வருவாய் 116.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று பெருமை கொள்கிறார் நிதி அமைச்சர் தியாகராஜன்.
வருவாயை பெருக்கும் வேறு எந்த திட்டமும் அரசிடம் இல்லாத நிலையில், மது விற்பனையை அதிகரிப்பதன் மூலமே வருவாய் அதிகரித்து நிதி நிலை சரியாகிறது என்பது தெளிவாகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மதுவின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளால் அதிக இளம் விதவைகள் உள்ளார்கள் என்று சில வருடங்களுக்கு முன்னர் கனிமொழி கூறியதை நாம் மறந்து விட முடியாது.
‘குடி குடியை கெடுக்கும்’ என்ற வாசகம் கொண்ட ‘சரக்கை’ அதிகம் விற்று பலரின் ‘விதி’யை முடித்து,
குடும்ப தலைவனை இழக்கும் குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 தேவையா? என்பதை முதல்வர் சிந்திக்க வேண்டும்.
ரூபாய் 1000 திட்டத்தை கைவிட்டு மது விலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பல லட்சம் குடும்பங்கள் சிறப்பாக வாழும்” என்று தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கண்ணியமாகத்தான் பேசவேண்டுமெனில் பாஜக தலைவர் பொறுப்பே வேண்டாம்: அண்ணாமலை