காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கரையோர கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்து இருக்கிறது. இதில் ஈரோடு மாவட்டம் பவானி கரையோர பகுதிகளில் வசிக்கும் 856 பேரும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கிராமங்களைச் சேர்ந்த 649 பேரும், பள்ளிப்பாளையத்தில் 833 பேரும் ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்டு 6) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். “ கடந்த ஐந்து நாட்களாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்காக சென்று கொண்டிருக்கிறது.
இந்த வெள்ள நீர் குமாரபாளையம், பள்ளிபாளையம், பவானி உள்ளிட்ட காவேரி கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். வருவாய்த்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. மூழ்கிய உடைமைகளை அந்த குடும்பங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மருத்துவ வசதிகள் முறையாக ஏற்படுத்தி தரவில்லை.
அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அரசு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஐந்து நாட்கள் தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.
இதை எந்த ஒரு அமைச்சரும் பார்க்கவில்லை. நேற்றைய தினம் இங்கு வருவேன் என்று அறிவித்திருந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் சந்திக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதை அறிந்த அமைச்சர்கள் உடனடியாக வந்து பார்வைவிட்டு சென்றுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் எல்லா வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால் ஆளும் கட்சி எந்த வித நடவடிக்கைகளும் எடுக்காததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதை கண்டு கொள்ளாத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாதபோதும் மக்களுக்கு துன்பம் ஏற்படும் போது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்ற கட்சியாக செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து உதவி செய்யும் கட்சி அதிமுக. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் உதவி செய்யும்” என்றார்.
மேலும், “அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் மூலம் ஏரிகளை நிரப்பியிருக்க வேண்டும். அந்த திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்தில் திமுக விஞ்ஞான முறையில் பெரிய ஊழல் செய்துள்ளது. மக்களுக்கு கொடுக்கின்ற பாலில் கூட ஊழல் செய்த அரசாங்கம் திமுக அரசாங்கம் தான்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார்.
–கலை.ரா
இலங்கையின் சீன ஆதரவு மாறாது: சீமான் எச்சரிக்கை!