நியூ டெல்லி டெலிவிஷன் என்கிற NDTV தொலைக்காட்சி ஊடகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் கௌதம் அதானி பங்கு பரிவர்த்தனைகள் மூலம் வாங்கிவிட்டதாக இன்று (ஆகஸ்டு 23) மாலை தகவல்கள் வெளிவந்தன.
இந்த தகவல் வந்த சில மணி நேரங்களில் இன்றிரவு என் டி டிவி ஊடகம் அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
அதில், “என்.டி.டி.வி.யுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒப்புதல் இல்லாமல்… என்.டி.டிவியின் நிறுவனர்- ப்ரமோட்டர்களான ராதிகா மற்றும் பிரனாய் ராய் ஆகியோருடன் எந்த விவாதமும் இல்லாமல், RRPR ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்டின் கட்டுப்பாட்டை கைப்பற்றியதாக விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (விசிபிஎல்) அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இந்த RRPR நிறுவனம் என்டிடிவியில் 29.18% பங்குகளை வைத்துள்ளது. அதன் அனைத்து ஈக்விட்டி பங்குகளையும் விசிபிஎல் நிறுவனத்திற்கு மாற்ற இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
2009-10ல் என்.டி.டி.வி நிறுவனர்களான ராதிகா மற்றும் பிரனாய் ராய் ஆகியோருடன் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் VCPL தனது உரிமைகளை செயல்படுத்தியதாக தெரிகிறது.
VCPL இன் இந்த நடவடிக்கையானது என்.டி.டி.வி நிறுவனர்களுடன் எந்த உரையாடல் அல்லது ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்பட்டது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
NDTV அதன் செயல்பாடுகளில் ஊடக தர்மத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் போல் பெருமையுடன் தொடர்ந்து எங்கள் ஊடக தர்மத்தைத் தொடருவோம்” என்று கூறியிருக்கிறது.
வேந்தன்
NDTV-க்குள் அதானி நுழைந்தது எப்படி?