நிர்மலா பேச்சு: கிண்டலடிக்கும் சுவாமி… கேள்வி கேட்கும் திருமா

அரசியல்

விலைவாசி உயர்வு பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய உரைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விலைவாசி உயர்வு பற்றி நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று (ஆகஸ்ட் 1) பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது.

கொரோனா, ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்ட சூழலிலும் 7 சதவீதத்திற்குள் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. பொருளாதார மந்தநிலையோ, தேக்கநிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை” என்றார்.

இவருடைய பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று நிதி அமைச்சர் கூறியதாக இன்று ஊடக செய்திகள் கூறுகின்றன.

அவர் சொல்வது சரிதான். ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவிட்டது. எனவே தற்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்வது குறித்த கேள்வி எழவே இல்லை ” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல்.திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

“விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்திற்கு விடையளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நிலை குறித்து இந்தியாவை அண்டை நாடுகளோடு ஒப்பீடு செய்தார்.

அப்போது இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஐஎம்எப் மற்றும் பிற நாடுகளில் கையேந்துகின்றன எனக் குறிப்பிட்டார்.

நம்மைப் பற்றி தம்பட்டமடிப்பது சரி. ஆனால் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் உலகமே உற்றுக் கவனிக்கக்கூடிய ஓர் அவையில் பிற நாடுகளை இழிவு செய்வதுபோல் பேசியது அரசியல் நாகரிகமா?.

கையேந்துகிறார்கள் என்பது நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படும் சொற்களா? தெளிவுபடுத்துவார்களா? நெருடலாக உள்ளது.

விலைவாசி உயர்வு, பட்டினிச்சேவைகள் போன்றவை மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், இந்தியா எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றுவிட்டதைபோல தம்பட்டமடிப்பது நெருடலாக உள்ளது.

உலகமே கவனித்துக்கொண்டிருக்கும் மக்களின் அவையில் இவ்வாறு பிற நாடுகளை கேலி செய்வது அரசியல் நாகரிகமா? எனும் கேள்வி எழுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

பெட்ரோல்-டீசல்-ஜிஎஸ்டி: நிர்மலாவுக்கு பிடிஆர் பதில்!

+1
0
+1
1
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *