தேசிய ஜனநாயகக் கூட்டணியான தேஜகூ என்பதற்குப் பதிலாக தேமுதிக என பாஜக அறிக்கையில் இடம்பெற்றிருந்தது தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்த் அறிவிக்கப்பட்டார். வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில தினங்களில், அக்கட்சித் தலைமை ஆனந்த்தை திரும்பப் பெற்று எடப்பாடி தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளது என தகவல் பரவியது.
இதற்கு தேமுதிக தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதோடு, ஆனந்த் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து அடுத்தகட்ட பணியை கவனித்து வருகிறார்.
மற்றக் கட்சிகள் தேர்தல் பணிகளைக் கவனித்து வர, அதிமுக பாஜக இடையேயான கூட்டணி, பாஜக யாருக்கு ஆதரவு என பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் டெல்லி சென்ற அண்ணாமலை அங்கு முக்கிய பாஜக தலைவர்களைச் சந்தித்து ஈரோடு கிழக்கு நிலவரம் குறித்துப் பேசிவிட்டு சென்னை வந்தார்.

இன்று காலை தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, அண்ணாமலை உள்ளிட்டோர் ஓபிஸையும், ஈபிஎஸையும் சந்தித்துப் பேசினர்.
இதன்பின் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் சிடி ரவி ஆங்கிலத்தில் பேசினார். அப்போது தீயசக்தியான திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணியும், அதிமுகவும் உறுதியுடன் ஒன்றுபடுவது அவசியம் என்றார்.
அவர் ஆங்கிலத்தில் பேசிய நிலையில், அதன் தமிழ் மொழிபெயர்ப்பு சில நிமிடங்களில் அறிக்கையாகக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார் அண்ணாமலை.
அதன்படி வெளியிடப்பட்ட அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் தீயசக்தியான திமுகவை ஒழிக்க தேமுதிகவும், அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே பாஜக அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த அறிக்கை கட்சி நிர்வாகிகளிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கமலாலயத்தில் விசாரித்த போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பதிலாகத்தான், தவறுதலாக தே.மு.தி.க என்று டைப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுவிட்டது. பின்னர் இதுகுறித்து தங்கள் கவனத்துக்கு தெரியவந்தவுடன் சரிசெய்யப்பட்டு புதிய அறிக்கை வெளியிடப்பட்டது என்றனர்.
தற்போது அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தில் திருத்தப்பட்ட அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈரோட்டில் வைத்த பேனரில். தேசிய ஜனநாயக ’முற்போக்கு’ கூட்டணி என்று இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டைப்போக்ராபி பிழை ஏற்பட்டு முற்போக்கு என்ற வார்த்தை சேர்ந்துவிட்டது என்று கூறியிருந்தார். தற்போது அண்ணாமலையின் அறிக்கையிலும் டைப்போக்ராபி பிழை ஏற்பட்டிருக்கிறது.
பிரியா
நீதிமன்ற உத்தரவின்படி பொதுக்குழு கூட்டப்படும்: சி.வி.சண்முகம்
ஆர்.என்.ரவி போல் இல்லை: ஆளுநர் உரையை அப்படியே வாசித்த தமிழிசை
எடப்பாடியின் கூற்றை நீதிமன்றம் நிராகரித்துள்ளது: மனோஜ் பாண்டியன்