சபாநாயகர் அப்பாவு அவை மரபை மீறியதால் ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார் என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (பிப்ரவரி 12) தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கியது. அரசின் உரையை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தார். இதனையடுத்து ஆளுநரின் தமிழ் உரையை சபாநாயர் அப்பாவு வாசித்தார்.
இதனையடுத்து “தமிழகத்திற்கு தேவையான நிதிகளை மத்திய அரசு மூலம் ஆளுநர் ரவி பெற்றுத்தர வேண்டும், சவார்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றே குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்” என்று சபாநாயகர் அப்பாவு பேசியதையடுத்து, ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,
“ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்து முடித்த பின்னர், தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து ஆளுநர் வாங்கி தரவேண்டும் என்றும், சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்கள் என்றும் பேசி அவை மரபை அப்பாவு மீறியுள்ளார். ஆளுநர் அவை மரபுப்படி நடந்திருக்கிறார்.
சபாநாயகர் மரபை மீறியதால் தான் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். சபாநாயர் இந்த வார்த்தைகளை பேசாமல் இருந்தால், ஆளுநர் முழுமையாக அவையில் இருந்திருப்பார். எந்த மாநிலத்திலும் சபாநாயகர் இதுபோன்று நடந்ததில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நாட்டுப் பண் இசைக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியதில் தவறு எதுவுமில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநருக்கு எதிராக சபாநாயகர் அவதூறு: ஆளுநர் மாளிகை விளக்கம்!
ஆளுநரின் வெளிநடப்பு நியாயப்படுத்த முடியாதது: அன்புமணி