நேருவுடன் நயினார் சந்திப்பு?  நெல்லையில் கிளம்பும் புயல்!

அரசியல்

தமிழக பாஜக துணைத் தலைவரும்,  சட்டமன்ற பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் விரைவில் திமுகவில் இணைவாரா என்ற கேள்வி நெல்லை அரசியல் வட்டாரங்களில் மீண்டும் புயலாக புறப்பட்டிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இருந்து விலகப் போகிறார், திமுகவில் சேரப் போகிறார் என்று தகவல்கள் பெரிதாக பேசப்பட்டன. ஒரு கட்டத்தில் அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் நெல்லை மகாராஜா நகரில்  உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்து சமாதானப்படுத்தினார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 4 இடங்களில் அதிமுக கூட்டணியோடு வெற்றி பெற்ற நிலையில், தமிழக சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார் நயினார் நாகேந்திரன். தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவோம் என்று நயினார் எதிர்பார்த்த நிலையில்,  அரசியலுக்கே புதியவரான அண்ணாமலையிடம் அந்த பதவி அளிக்கப்பட்டது. இதனால் அப்படி இப்படிதான் இருந்தார் நயினார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நயினார் நாகேந்திரன்  நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரயிலில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் 4 கோடியை எடுத்துச் செல்லும்போது  போலீசில் பிடிபட்டனர். அந்த வழக்கு இன்னமும் சிபிசிஐடியில் விசாரணையில் இருக்கிறது.

இந்த சூழலில்தான் சில வாரங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். நெல்லை மாவட்டத்தில் திமுகவை வலிமைப்படுத்துவது தொடர்பாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் நெல்லையில் அத்தனை தொகுதிகளையும் வெற்றி பெறுவது தொடர்பாகவும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார் நேரு.

இந்த நிலையில் நெல்லை அரசியல் வட்டாரத்தில் நம்மிடம் பேசிய மூத்த திமுக நிர்வாகிகள்,

“கடந்த நவம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை  திருநெல்வேலி மாவட்டம், மானூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அனைத்தலையூரில் நடைபெற்ற   பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டியை பொறுப்பு அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

8 பேர், நபர்கள் டென்னிஸ் விளையாடுகின்றனர் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்

இந்த நிகழ்வில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மேயர் ராமகிருஷ்ணன், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட கட்சி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும்  நெல்லை டவுனுக்குள் சென்ற அமைச்சர் நேரு அங்கே ஒரு தனியார் ஹோட்டலுக்குள் நுழைந்தார். அந்த ஹோட்டலில் முன்னாள் அமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான நயினார் நாகேந்திரன்  நேருவுக்காக காத்திருந்தார். இருவரும் சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலாக பேசிக் கொண்டிருந்தார்கள்.  இந்த சந்திப்பு பற்றி ஓரிரு நாட்கள் கழித்துதான் திமுக நிர்வாகிகளுக்கே தெரியவந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்கிறார்கள்.

நாம் இதுகுறித்து நெல்லை திமுக மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது,

“நெல்லையில் திமுகவின் வளர்ச்சிக்காக பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் எல்லாவிதமான முயற்சிகளையும் நேரு செய்து வருகிறார்” என்று பொதுவாகச் சொன்னார்கள்.

அமைச்சர் நேருவுடனான சந்திப்பு என வரும் தகவல் குறித்து கேட்பதற்காக நயினார் நாகேந்திரனை  அவரது அலைபேசிக்குத் தொடர்புகொண்டோம்.

“நான் உங்கள் வீட்டுப் பிள்ளை… இது ஊரறிந்த உண்மை” என்ற எம்.ஜி.ஆர்.  பாடல் காலர் ட்யூனாக ஒலித்ததே தவிர, நயினார் போனை எடுக்கவில்லை.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இனி அவகாசம் கேட்க கூடாது : செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அறிவுறுத்தல்!

ஆலமரத்தை வெட்ட பிளேடா? – விஜய்க்கு உதயநிதி பதிலடி!

+1
0
+1
2
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *