கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கைப்பற்றப்பட்ட சுமார் 4 கோடி ரூபாய் பணம் தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 3 பயணிகளிடம் இருந்து 3.99 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினரும், தாம்பரம் போலீஸாரும் கைப்பற்றினர்
பணத்தை எடுத்துச் சென்றது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான நிறுவனத்தின் ஊழியர்கள் என்பதால் இது பரபரப்பாக பேசப்பட்டது.
சில நாட்களில் இந்த வழக்கை சிபிசிஐடி விசார்ணைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசு. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தொழில் பிரிவு தலைவர் கோவர்த்தனனிடம் ஏற்கனவே விசாரணை நடத்திய சிபிஐசிடி போலீஸார், நேற்று (மே 21) கோவையில் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.,ஆர். சேகரிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும் பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகனுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
இந்த நிலையில், “ரயில் பயணிகளிடம் இருந்து ₹3.99 கோடி பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு-குற்றப் புலனாய்வுத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) ரத்து செய்ய வேண்டும்” என்று பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
“அரசியல் பழிவாங்கல் காரணமாக இந்த விவகாரத்தில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை ஒரு பக்கச்சார்பானது. இந்த விவகாரத்தில் பாஜக வை களங்கப்படுத்தும் நோக்கில் கைப்பற்றப்பட்ட பணத்தை பாஜகவுடன் தொடர்புபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அந்த மனுவில் கேசவ விநாயகன் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த பணம் தன்னுடையது அல்ல என்று நயினார் நாகேந்திரன் மறுத்தார். நேற்று பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகரும் இது கட்சிப் பணம் அல்ல என்று கூறியுள்ளார்.
அப்படியென்றால் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்ற கேள்வி நீடிக்கிறது.
இந்த நிலையில், “பாஜக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகனுக்கு இந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த எஃப்.ஐ.ஆரையே ரத்து செய்யுமாறு வழக்குத் தொடர்ந்துள்ளது ஆச்சர்யமளிக்கிறது. இது நம்பர் ஆனதும் ஆச்சரியமளிக்கிறது.
சிபிசிஐடியின் விசாரணைக்கு எதிராகவோ, எஃப்.ஐ.ஆரை ஸ்குவாஷ் செய்யுமாறோ குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் கேசவ விநாயகனுக்கு போலீஸ் விசாரணைக்காக சம்மன் தான் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோர, அவருக்கு சட்ட ரீதியான உரிமை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது” என்கிறார்கள் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு வரவில்லை. நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரங்களில்.
நேற்று (மே 21) சிபிசிஐடி விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர், ‘இந்த விசாரணையை எதிர்த்து வழக்குத் தொடுக்கும் நேரத்தில் அவசரமாக போலீஸார் என் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்” என கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’வடக்கன்’ தலைப்புக்கு தடைபோட்ட சென்சார் போர்டு… இதுவரை சிக்கலை சந்தித்த அரசியல் படங்கள்!
அதெப்படிங்ணா, இவிங்க போடுற வழக்கெல்லாம் உடனே விசாரணைக்கு வந்துருது?