’சீதாக்கா…. சீதாக்கா… சீதாக்கா…’
ஹைதராபாத் எல்.பி. ஸ்டேடியத்தில் தெலங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டதும்… அவரது அமைச்சரவை சகாவாக தன்சரி அனுசுயா பதவிப் பிரமாணம் ஏற்க வந்தபோதுதான் மொத்தக் கூட்டமும், ‘சீதாக்கா….சீதாக்கா’ என்று ஆர்ப்பரித்தது.
மூன்றாவது முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது அமைச்சராக பதவியேற்றிருக்கிற தன்சாரி அனுசுயா என்கிற சீதாக்காதான் இன்று தெலங்கானா தாண்டியும் டிரண்டிங்கில் இருக்கிறார்.
No post is greater than your love & support 🙏
I will do my carrier best hard work with new responsibilities..
I thank @INCIndia Sonia amma @RahulGandhi @priyankagandhi @kharge @kharge @kcvenugopalmp @Manikrao_INC @RohitChINC @PCvishnunadh @revanth_anumula #TelanganaCabinet pic.twitter.com/uYcx15wxcE
— Danasari Seethakka (@seethakkaMLA) December 8, 2023
அவருக்கு மக்கள் மத்தியில் எழுந்த கொண்டாட்ட வரவேற்பை சில நிமிடங்கள் தானும் ரசித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், அந்த மின்சார நிமிடங்களிலேயே சீதாக்காவை பதவியேற்க அழைத்தார்.
யார் இந்த தன்சரி அனுசுயா என்கிற சீதாக்கா?
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நக்சலைட்தான் அனுசுயா முலுகு (எஸ்டி-ஒதுக்கீடு) தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இன்றைய தெலங்கானா அன்றைய ஆந்திரா மாநிலத்தில் சத்தீஸ்கர் எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தொகுதியான முலுகு தொகுதியில் ஜெகன்ன குடம் என்ற கிராமத்தில் கோயா என்னும் பழங்குடியின குடும்பத்தில் பிறந்தவர் அனுசுயா.
200 சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி அது. அனுசுயா குடும்பத்தினர் போல ஆயிரக்கணக்கான பழங்குடியின குடும்பங்கள் அந்த காட்டுக்குள் வசித்து வந்தனர். நக்சலைட்டுகளின் தலைநகரம் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது முலுகு காடு.
இந்தப் பக்கம் ஆந்திரா, அந்தப் பக்கம் சத்தீஸ்கர் என இரு மாநில அரசுகளுக்கும் போலீசாருக்கும் எதிராக ஆயுதக் கிளர்ச்சி செய்துவந்த நக்சலைட்டுகளுக்கு முலுகு பகுதி மக்கள் பெரும் ஆதரவாக இருந்தனர். அனுசுயா மலைகிராமத்தில் இருந்து நீண்ட தூரம் நடந்து வந்து அரசுப் பள்ளியில் படித்தார்.
அப்போது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கல்வி உள்ளிட்ட எல்லா உரிமைகளும் மறுக்கப்படுவதாகவும், அதை வென்றெடுப்பதற்கு ஆயுதப் புரட்சியே சரி என்றும் நக்சலைட்டுகள் கிராமக் கூட்டங்களில் பேசியது அனுசுயாவை அவர்கள் பக்கம் ஈர்த்தது.
அனுசுயா தனது 14 ஆவது வயதில் நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து துப்பாக்கி தூக்கினார்.
1997 முதல் 11 வருடங்கள் ஆந்திர, சத்தீஸ்கர் அரசுகளை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தை நடத்தினார் அனுசுயா. அவர் மீது ஆறு கிரிமினல் வழக்குகள் இருந்தன. அனுசுயாவின் சகோதரர், அவரது கணவர் என குடும்பத்தின் முக்கிய ஆண்களை ஆந்திர போலீஸ் என்கவுன்ட்டரில் தீர்த்துக் கட்டியது.
இந்த 11 வருட போராட்டக் காலத்தில் ஏற்பட்ட அனுபவமும் அரசியல் சூழ்நிலையை அவர் கவனித்த விதமும் அனுசுயாவுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.
1997 இல் நக்சலைட்டுகளுக்கு ஆந்திரா அரசு வழங்கிய பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் ஆயுதப் போராட்டத்தை விட்டு, தனது மக்களுக்காக ஆக்கபூர்வமான வகையில் போராட முடிவு செய்தார் அனுசுயா. ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு சட்ட ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் தன் மக்களுக்காக போராடத் தொடங்கினார்.
அதேநேரம் நக்சலைட் இயக்கத்தில் சேர்வதற்கு முன் பள்ளி இறுதிப்படிப்பை முடித்திருந்த அனுசுயா, அந்த இயக்கத்தில் இருந்து விலகிய பின் சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆனார். போலீசாரால் பொய் வழக்குகளை எதிர்கொள்ளும் பழங்குடியின மக்களுக்காக வாரங்கல் நீதிமன்றத்தில் வாதாடினார். பழங்குடியினருக்காக செயல்படும் என்.ஜி.ஓ.க்களில் தன்னை இணைத்துக் கொண்டு பணி செய்தார்.
அதன் பின் தெலங்கானா தனி மாநில போராட்டத்தின் பாசறையாக விளங்கிய உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். பின் ஆந்திராவின் பழங்குடியினர் பற்றி ஆய்வு செய்து டாக்டரேட் பட்டம் பெற்றார் அனுசுயா.
ஆயுதப் போராட்டத்தை கைவிட்ட அனுசுயா பழங்குடியின மக்களுக்காக போராடி அவர்களுக்கு பலன்களைப் பெற்றுத் தர அரசியலே சரியான வழி என்று முடிவு செய்தார். அப்போது ஆந்திராவில் சக்தி வாய்ந்த தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.
முலுகு தொகுதியில் அனுசுயாவுக்கு இருக்கும் செல்வாக்கைக் கண்ட சந்திரபாபு நாயுடு, 2004 சட்டமன்றத் தேர்தலில் முலுகு தொகுதியில் தெலுங்குதேசம் சார்பில் அனுசுயாவையே போட்டியிட வைத்தார்.
ஆனால் முதல் தேர்தலில் அனுசுயா வெற்றி வாய்ப்பை இழந்தார். 2009 இல் மீண்டும் போட்டியிட்டு முலுகுவிலிருந்து முதன் முறை எம்.எல்.ஏ.வாக ஆனார் அனுசுயா. 2014 இல் தெலங்கானா உருவான பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில், தெலங்கானா ராஷ்டிர சமிதி பெரும் வெற்றி பெற்றது. அந்த அலையில் அனுசுயா தோற்றார்.
தெலுங்குதேச அரசின் தொடர் போலி என்கவுன்ட்டர்களால் மனம் வெறுத்துப் போயிருந்தார் அனுசுயா. தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடுக்கு செல்வாக்கு இல்லை என்பதை அறிந்து ரேவந்த் ரெட்டி தெலுங்கு தேசத்தில் இருந்து விலகியபோது அவருடன் வெளியேறிவிட்டார் அனுசுயா.
2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முலுகு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். அதன் பின் தெலங்கானா மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் ஆனார். இதோ இப்போது மூன்றாவது முறையாக முலுகு தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அனுசுயாவை அவரது சேவைகள் மற்றும் தாயுள்ளம் காரணமாக பழங்குடியின மக்கள் சீதாக்கா என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே அவரது அரசியல் அடைமொழியாகிவிட்டது.
குறிப்பாக கோவிட் காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது காடுகளில் இருக்கும் பழங்குடியின மக்கள் உணவு கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் சீதாக்கா இரு சக்கர வாகனம், மற்றும் டிராக்டர்களை எடுத்துக் கொண்டு வன கிராமங்கள் முழுதும் சென்று அனைத்து பழங்குடியின மக்களுக்கும் உணவுப் பொருட்களை அளித்தார்.
கோவிட் காலம் மட்டுமல்ல இயற்கை சீற்ற காலங்களிலும் பழங்குடியின மக்களுக்கு உறுதுணையாக நின்றவர் சீதாக்கா. மூன்றாவது முறை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு காங்கிரஸ் வேட்பாளராக சீதாக்கா இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில்,
“வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எனது தொகுதியில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க பாடுபடுவேன். முலுகுவில் திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் ஹைதராபாத் சென்றுதான் படிக்க வேண்டும் என்ற நிலையை உடைப்பேன்” என்று கூறினார் சீதாக்கா.
சீதாக்கா எம்.எல்.ஏ.வாக இருந்தபோதே எப்படி உதவினார் என்பது பழங்குடியின மக்களுக்குத் தெரியும். அவர் அமைச்சராகிவிட்டார் என்னவெல்லாம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு தான் சீதாக்கா அமைச்சராக பதவியேற்ற அந்த நிமிடத்தில் எழுந்த வைப்ரேஷனுக்குக் காரணம்.
அமைச்சராக பதவியேற்றதும் தனது தாய் தந்தையோடு முதல்வர் ரேவந்த் ரெட்டியை சீதாக்கா சென்று சந்தித்த அந்த புகைப்படம் தெலங்கானா முழுவதும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுக்குள் பழங்குடியின குடும்பத்தில் பிறந்த நக்சலைட்டாக துப்பாக்கி தூக்கி வளர்ந்த ஒரு பெண் தனது கல்வி கொடுத்த மன மாற்றத்தால் சமூக மாற்றத்துக்கு தயாராகியுள்ளார். தெலங்கானாவும் சீதாக்காவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’கலைஞர் 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு!
திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைப்பு!