சனாதனத்தை அவமதித்த உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும் என்ற புதிய கோரிக்கை தமிழக பாஜகவுக்குள் இருந்து எழுந்திருக்கிறது.
அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழித்தே தீரவேண்டும் என்று பேசிய பேச்சு இந்தியா முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்… நேற்று (செப்டம்பர் 6) பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில், ‘சனாதன சர்ச்சைக்கு பாஜக மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும், இதை லேசாக விட்டுவிடக் கூடாது. தேசியப் பிரச்சினையாக கட்டியெழுப்ப வேண்டும்’ என்ற ரீதியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இதை தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்னம்பலத்திலும் இதுகுறித்து நேற்று கேபினட்டில் சனாதன விவகாரம்: மோடி போட்ட உத்தரவு என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். முதல்வர் ஸ்டாலினும் இன்று இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிட்டு பிரதமர் மோடியைக் கண்டித்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 7) காலை தமிழக பாஜக சார்பிலான குழுவினர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், வழக்கறிஞர் அணி செயலாளர் பால் கனராஜ் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து, “உதயநிதியின் சனாதன ஒழிப்பு என்ற வெறுப்பு பேச்சிற்கு எதிராக, குற்றவியல் நடைமுறையை தொடர்வதற்காக அனுமதி அளிக்க வேண்டும். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாஜக சார்பாக கோரிக்கை விடுத்தனர்.
நேற்று முன் தினமே இது தொடர்பாக அஸ்வத்தாமன் ஆளுநருக்கு ஆன் லைன் மூலம் புகார் கடிதம் அனுப்பியதும், அதன் பிறகு சுப்பிரமணியன் சுவாமியும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் முன்னாள் ஊடகத் துறை பொறுப்பாளரும், ஆளுநர் தமிழிசையின் தீவிர ஆதரவாளருமான ஏ.என்.எஸ். பிரசாத், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில்,
“தமிழகத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தின் புனிதத்தை இழிவு படுத்தும் வகையில் சனாதன தர்மம் குறித்து தவறான, ஆபத்தான, கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது தேச ஒற்றுமைக்கும், மக்களின் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது.
உள்நோக்கத்துடன் மத உணர்வுகளை தூண்டிவிட்டு மாற்று மதத்தினர் வாக்குகளை பெற சமூகத்தின் அமைதியை கெடுத்து சாதி, மத வேற்றுமைகளை உண்டாக்க முயலும் உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேச ஒற்றுமைக்கு குந்தகம் நடத்த ஏதேனும் சதி நடந்ததா என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உதயநிதி விவகாரத்தை தமிழக பாஜகவுக்கு முன்பே அரசியல் சர்ச்சையாக மாற்றியது வட இந்திய பாஜகதான். தமிழக பாஜக இதில் கோட்டை விட்டுவிட்டது என்ற கோபம் அக்கட்சியின் தேசிய தலைமைக்கு இருக்கும் நிலையில்… உதயநிதியை மையமாக வைத்து தங்களது அரசியலை நிலைப்படுத்திக் கொள்ள தமிழ்நாடு பாஜகவுக்குள்ளேயே பலத்த போட்டி எழுந்துள்ளது.
அண்ணாமலைக்கு சளைக்காமல் ஆளுநர் தமிழிசை இந்த விவகாரத்தில் வேகமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில்தான், தமிழிசை ஆதரவாளரான ஏ.என்.எஸ். பிரசாத், ‘உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டம்’ என்ற புதிய கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
ஆக உதயநிதி விவகாரத்தை வைத்து இந்தியா முழுதும் பாஜக அரசியல் செய்து வரும் நிலையில், தமிழக பாஜகவுக்குள் யார் ஸ்கோர் செய்வது என்ற போட்டி தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது என்று பாஜகவினரே சொல்கிறார்கள்.
–வேந்தன்
சனாதன சர்ச்சை- உதயநிதிக்கு ஆதரவு… மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்!
சாமியார் மீது வழக்கு வேண்டாம்: உதயநிதி அறிக்கை!