தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் சோதனை நடத்துவதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மோடி அரசு எதிர்க்கட்சிகளை துன்புறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவது வெட்கக்கேடான முயற்சியாகும். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவது மோடி அரசின் அடையாளமாகும். இந்த தந்திரங்கள் எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்திவிடாது. மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயாக போராட்டத்தை தொடரவும் அதன் உறுதியை வலுப்படுத்தவும் எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு வன்மையான கண்டனங்கள். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் ஜனநாயக விரோத மத்திய அரசு எதிர்க்கட்சிகள் குரலை நசுக்கும் மோசமான நோக்கத்துடன் அமலாக்கத்துறையை இப்போது தென் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “எதிர்க்கட்சிகளை துன்புறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் நமது ஜனநாயகத்திற்கு பாஜக சேதத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
டாஸ்மாக் மதுவில் சயனைடு: மீண்டும் 2 பேர் மரணம்!
அமலாக்கத்துறை சோதனை: மம்தா கண்டனம்!