ராஜன் குறை
இன்றைய நிலையில் ஒட்டுமொத்த உலகமும் சற்றேறக்குறைய 195 தேசிய அரசுகளின் (Nation States), அதாவது நாடுகளின் (Countries), தொகுப்பாக விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் (ஆங்கிலத்தில் United Nations) சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இன்றுள்ள தமிழ் மொழி பயன்பாட்டைப் பொறுத்தவரை நாடு என்ற வார்த்தை நிலப்பகுதியைச் சுட்டுவது. தேசம் என்ற வார்த்தை மக்கள் தொகுதியைச் சுட்டுவது. தேசியம் என்பது ஒரு தேசத்தைக் கட்டமைக்கும் கருத்தியல் சொல்லாடலாகும்.
அரசு என்பது அரசியலமைப்பு சட்டப்படி அரசியல் அதிகாரம் குவிக்கப்பட்ட நிறுவனம், நிர்வாக இயந்திரம். பெரும்பாலும் ஒவ்வொரு தேசமும், ஒரு அரசால் நிர்வகிக்கப்படுவதால் அவை தேசிய அரசுகள் எனப்படுகின்றன.
இந்தியாவில் மாநிலங்கள் எனப்படும் பகுதிகளே அரசு (State) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றினை ஒருங்கிணைக்கும் இந்திய தேசத்தை நிர்வகிப்பது ஒன்றிய அரசாங்கம் (Union Government) எனப்படுகிறது.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக இந்திய தேசிய அரசுதான் இருக்கிறது. அதாவது நடைமுறையிலும், உலகின் பார்வையிலும் இந்திய ஒன்றிய அரசாங்கம் ஒரு தேசிய அரசுதான்.
தேசங்களின் மக்கள் தொகை
உலகிலுள்ள 195 தேசிய அரசுகளில், நூறு தேசங்களில் மக்கள் தொகை ஒரு கோடிக்கும் குறைவாகவே இருக்கிறது. இருபது தேசங்களில் மட்டுமே மக்கள் தொகை எட்டு கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. அதே சமயம் இந்திய மாநிலங்களிலோ பலவற்றில் மக்கள் தொகை எட்டு கோடிக்கும் அதிகமாகும்.
அதனால் மக்கள் தொகைக்கும் அது தேசிய அரசாக இருப்பதற்கும் தொடர்பில்லை. பல சமயங்கள் புவியியல் எல்லைகள், மக்களின் இனம், மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் தனியான தேசிய அரசுகள் அமைக்கப்பட்டன அல்லது உருவாயின.
பண்டைய மன்னராட்சி கால நாடுகளுக்கும், நவீன தேசிய அரசுகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், நவீன தேசிய அரசுகளில் சட்டத்தின் ஆட்சி, மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நடக்கும் என்பதுதான்.
இன்றுள்ள 195 நாடுகளில் சற்றேறக்குறைய நாற்பத்து மூன்று நாடுகளில் இன்னமும் வம்சாவழி மன்னராட்சி நிலவினாலும், பெரும்பாலானவற்றில் மன்னருக்கு முற்றதிகாரம் கிடையாது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் மன்னர் ஒரு குறியீட்டு தலைவர் மட்டுமே. அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடம், அதன் பிரதம அமைச்சரிடம்தான் இருக்கும்.
இந்த 195 தேசிய அரசுகளில் பெரும்பாலானவை இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னரே இன்றுள்ள வடிவில் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. எழுபத்தைந்து ஆண்டுகள்தான் இன்றைய உலக அரசியல் அமைப்பின் வயது எனலாம்.
தேசிய அரசுகளும், சுயாட்சி பிரதேசங்களும்
பெரும்பாலான தேசங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேசங்களின், மக்கள் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாகத்தான் உள்ளன. தேசிய அரசுக்கும், பிரதேச அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வில் பல்வேறு குழப்பங்களும், தீர்க்கப்படாத பிரச்சினைகளும் நிலவுகின்றன. பல பிரதேச அரசுகள் தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்புகின்றன. அது சமயங்களில் வன்முறை போராட்டமாக மாறுகிறது.
ருவாண்டா, சூடான் ஆகிய நாடுகளில் வேறுபட்ட இனங்களிடையே நிகழ்ந்த மோதல் மிக மோசமான படுகொலைகள் அரங்கேற காரணமானது. துருக்கியில் குர்து இன மக்கள் சுயாட்சிக் கோரிக்கையை வன்முறையைக் கைக்கொண்டு ஒடுக்கியது துருக்கி அரசு.
வேறு பல நாடுகளில், உதாரணமாக வியட்நாமில், நாடு இரண்டாகப் பிரிந்து போரிட்டதில், அந்நிய சக்திகள் தலையிட்டதில், பெரும் அழிவும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டன. இத்தனைக்கும் வியட்நாமின் மொத்த மக்கள் தொகையே இன்றைய அளவில் பத்து கோடிக்கும் சற்றே குறைவுதான்.
ஒரு நாட்டின் ஒன்றிய அரசு, ஒரு பிரதேச மக்கள்மீது மொழி, பண்பாடு ஆகியவற்றை திணிக்கும்போதுதான், பிரிவினைவாத கோரிக்கைகள் உருவாகின்றன. இதற்கான உதாரணங்களை இந்தியாவின் அண்டைய நாடுகளிலேயே பார்க்கலாம்.
பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகள் என்ற அளவில் இந்தியாவின் கிழக்கேயிருந்த வங்காளத்தின் ஒரு பகுதி மேற்கேயிருந்த பலூசிஸ்தான், பஞ்சாபின் மேற்கு பகுதி ஆகியவற்றுடன் சேர்க்கப்பட்டு பாகிஸ்தான் என்ற நாடு 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேற்கு பாகிஸ்தான் ஒன்றிய அரசு உருது மொழியை வங்க மொழி பேசும் பகுதிகளில் திணித்ததால் கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திரப் போர் மூண்டு, 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் என்ற தனி நாடாக பிரிந்தது.
ஒரு தனி தீவு என்ற அளவில் தேசிய அரசாக உருவாகிய இலங்கை, வடக்கேயும், கிழக்கேயும் தமிழ் பேசும் மக்கள் மீது பெரும்பான்மை சிங்கள அரசு ஆதிக்கத்தை செலுத்தியதால் பெரும் உள் நாட்டுப் போர் மூண்டு உலகமே அதிர்ச்சியடையும் அளவு வன்முறையும், இன அழிப்பும் நடந்தேறின.
இன்றளவும் மக்கள் தொகை இரண்டு கோடி என்ற அளவிலேயே இருக்கும் அந்த அழகிய இலங்கைத் தீவு, கடும் பொருளாதார சீரழிவைச் சந்தித்துள்ளது. கடனில் மூழ்கி தத்தளிக்கிறது. ஏராளமான தமிழர்கள் புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழ்கிறார்கள்.

இங்கிலாந்தின் கதை
ஒரு நூறாண்டுக்காலம் மறைமுகமாகவும், நூறாண்டுக்காலம் நேரடியாகவும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து நாட்டின் கதை இன்னும் சுவாரஸ்யமானது. அதன் அதிகாரபூர்வமான பெயர் யுனைடெட் கிங்டம் (United Kingdom). பொதுவாக வழங்கும் பெயர் கிரேட் பிரிட்டன். அதாவது நான்கு நாடுகள் அதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதே அதன் கருத்தாகும்.
ஒட்டுமொத்த கிரேட் பிரிட்டனின் மக்கள் தொகை ஆறரை கோடி.
ஸ்காட்லாந்து என்ற பகுதியின் மக்கள் தொகை ஐம்பது லட்சம்.
வேல்ஸ் என்ற பகுதியின் மக்கள் தொகை முப்பது லட்சம்,
வடக்கு ஐயர்லாந்து என்ற பகுதியின் மக்கள் தொகை இருபது லட்சம்.
மீதமுள்ள மக்கள் தொகை இங்கிலாந்தில் வசிக்கிறது.
நீங்கள் இப்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்த்து வந்தால், வேல்ஸ் அணி தனியாகவும், இங்கிலாந்து அணி தனியாகவும் விளையாடுவதைப் பார்க்கலாம். ஏனெனில் வேல்ஸ் இங்கிலாந்தில் இணைந்துள்ள தனி நாடாக தன்னை உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்துள்ளது.
அந்த சிறிய பகுதிக்கு பல சுயாட்சி உரிமைகள் உள்ளன. காரணம் வெல்ஷ் மொழி என்பது தனித்துவமிக்க பண்டைய மொழி என்பதும், அந்த மக்கள் தனித்த இனம் என்று கருதப் படுவதும்தான்.
ஸ்காட்லாந்தை பொறுத்தவரை அது வெகுகாலமாகவே தனித்த நாடாகும் விருப்பத்தைக் கொண்டுள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற போராடிய வில்லியம் வாலஸ், ராபர்ட் ப்ரூஸ் ஆகியோரின் கதைகள் பிரசித்தமானவை.
அந்த 13ஆம் நூற்றாண்டு வில்லியம் வாலஸ் வரலாற்றினைக் கூறும் 1995ஆம் ஆண்டு மெல் கிப்ஸன் நடித்து இயக்கிய பிரேவ் ஹார்ட் திரைப்படத்தின் தாக்கத்தில் மீண்டும் ஸ்காட்லாந்தில் விடுதலை வேட்கை தலைதூக்கியது.
ஸ்காட்லாந்து ஏற்கனவே கணிசமான சுயாட்சி உரிமைகளை பெற்றிருந்தாலும், முழு சுதந்திரமான நாடாக விளங்க மக்கள் பலர் விரும்பியதால் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அரசும் ஒப்புக்கொண்டது. 2014ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது.
இரண்டு அணிகள் பிரச்சாரம் செய்தன. தனி நாடாக விரும்பிய அணி Yes Scotland. பிரிட்டிஷ் ஒன்றியத்தில் தொடர விரும்பிய அணி Better Together. இறுதியில் ஒன்றியத்தில் தொடர்வதற்கு ஆதரவாக 55% வாக்குகளும், தனி நாடாவதற்கு ஆதரவாக 45% வாக்குகளும் பதிவாகின. அதனால் ஸ்காட்லாந்து பிரிட்டிஷ் ஒன்றியத்தில் கணிசமான அதிகாரப் பகிர்வுடன் தொடர்ந்தது.
ஆனால், தற்போது மீண்டும் ஸ்காட்லாந்து அரசு பிரிந்து போக பொது வாக்கெடுப்பு நட த்த விரும்புகிறது. ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. நீதிமன்றமும் அனுமதி மறுத்து விட்டது. ஆனாலும் ஸ்காட்லாந்திலுள்ள அரசியல்வாதிகள் தனி நாடு கோரிக்கையை கைவிடுவதாக இல்லை.
ஸ்காட்லாந்தைவிட மோசமான கதை வட அயர்லாந்து பகுதியின் கதை. அங்கே கத்தோலிக்கர்களில் பெரும்பாலோர் அயர்லாந்து அரசுடன் இணைய வேண்டும் எனக் கோருகிறார்கள். புரொடஸ்டண்ட் சமயத்தைச் சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் ஒன்றியத்தில் தொடர விரும்புகிறார்கள்.
பல வட அயர்லாந்து விடுதலை தீவிரவாதக் குழுக்கள் குண்டு வெடிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளன. இந்திய சுதந்திரத்தின்போது கவர்னர் ஜெனரலாக விளங்கிய லார்ட் மெளண்ட்பேட்டன் விடுமுறையை கழிக்கச் சென்றபோது ஐரிஷ் தீவிரவாதிகளால் 1979ஆம் ஆண்டு கொல்லப்பட்டது ஓர் உதாரணம்.
இவ்வாறாக சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் ஒன்றியத்தில் ஐம்பது லட்சம் பேர் கொண்ட ஸ்காட்லாண்டு, முப்பது லட்சம் பேர் கொண்ட வேல்ஸ், இருபது லட்சம் பேர் கொண்ட வட அயர்லாந்து ஆகிய பகுதிகள் சுயாட்சி பகுதிகளாக விளங்குவதுடன், தனி நாடாகவும் விரும்புகின்றன என்றால், மற்ற பல நாடுகளில் தேசிய அரசுகள் சந்திக்கும் சிக்கல்களை சொல்ல வேண்டியது இல்லை.

இந்திய ஒன்றியத்தின் சிறந்த அங்கமாக விளங்கும் தமிழ் நாடு
கிட்ட த்தட்ட எட்டு கோடி மக்களையும், தொன்மையான, தனித்துவமான மொழியும் பண்பாடும் கொண்ட தமிழ் நாடு, இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கமாக விளங்குகிறது. கட்டாய இந்தி மொழி கல்வி, இந்திய ஒன்றியத்தின் ஒற்றை அலுவல் மொழியாக இந்தியை மாற்றுவது போன்ற முயற்சிகளை எதிர்த்து போராட நேர்ந்தாலும், அதை அடுத்து திராவிட நாடு கோரிக்கை எழுந்தாலும், தமிழ் நாடு இந்திய ஒன்றியத்தின் முக்கிய அங்கமாக, ஒற்றுமையினை நாடும் பகுதியாகவே விளங்கி வந்துள்ளது.
“உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற உயரிய மக்களாட்சி பண்பினை கலைஞர் கருணாநிதி வெளிப்படுத்தியது போல என்றுமே, இந்திய ஒன்றியத்தின் மேன்மைக்கு, வளர்ச்சிக்கு தமிழ் நாடு பங்களித்து வந்துள்ளது.
ஒன்றிய அமைச்சரவையில் நிதி, உள்துறை, பாதுகாப்பு எனப் பல முக்கிய துறைகளை தமிழ் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் நிர்வகித்து வந்துள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முரசொலி மாறன் ஒன்றிய அரசின் வர்த்தக அமைச்சராக உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் நாட்டு நலன் காக்க ஆற்றிய உரை பலராலும் பாராட்டப்பட்டது. சமூக நீதி, மக்கள் நல கொள்கைகளில் தமிழ் நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பதை பொருளாதார அறிஞர்கள் பாராட்டுகின்றனர்.
பாஜக அரசின் கவலைக்குரிய போக்கு
இப்படியாக அமைதி வழியில், மக்களாட்சி நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றியத்தின் ஒற்றுமைக்கு ஊறு செய்யாமல், உரிமைகளை கோரிப்பெற்று உலகிற்கே சிறந்த உதாரணமாக விளங்கும் தமிழ் நாட்டில் இன்று மீண்டும் கவலை மேகங்கள் சூழ்ந்துள்ளன.
காரணம் ஒன்றிய பாஜக அரசுதான். நாட்டின் பல பகுதிகளில் அவர்கள் நியமிக்கும் ஆளுநர்கள் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு தொல்லைகள் விளைவிப்பதுதான். தமிழ் நாட்டு ஆளுநரும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார். பண்பாடு, கருத்தியல் சார்ந்த விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, அதன் கொள்கைகளுக்கு முரண்பாடாகப் பேசுகிறார்.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ரயில்வே, வங்கிகள், தபால் துறை உள்ளிட்ட துறைகளில் தமிழ் தெரியாத வட நாட்டவர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை இந்தியில் உரையாடச் செய்து தமிழ் நாட்டு மக்களுக்கு இன்னல் விளைவிக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பள்ளிக்கல்வியில் மும்மொழிக் கொள்கையைப் புகுத்துகிறார்கள். தி.மு.க தொண்டர் ஒருவர் மீண்டும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக தன்னை மாய்த்துக்கொண்டு உயிர்த்தியாகம் செய்யுமளவு மீண்டும் கவலை மேகங்கள் சூழ்ந்துள்ளன.
காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், நாகாலாந்து உள்ளிட்ட சில மாநிலங்களில் வன்முறை இயக்கங்கள் தோன்றியிருந்தாலும், நூற்று முப்பது கோடி மக்களை கொண்ட இந்திய ஒன்றியம், ஒரு தேசமாக கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் மிகச் சிறப்பான ஒரு வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதென்றால் அதற்குக் காரணம் மக்களாட்சி.
காலம் தவறாமல் நடைபெறும் தேர்தல்களில் மக்கள் பங்கேற்பதன் மூலம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த, உரிமைகளைக் கோர பயின்றுள்ளார்கள். அந்த விதத்தில் மாநில அரசியலும், மாநில கட்சிகளும் மக்களின் பங்கேற்பை பெருமளவு உறுதி செய்வதன் மூலம் இந்திய ஒன்றியத்தை பெரிதும் வலுப்படுத்தியுள்ளன.
இந்த போக்கினை சீர்குலைக்கும் விதமாக ஒன்றிய அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்பதையே நாட்டின் நலனில் அக்கறை உள்ளோர் கூறுவார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இதனை தெள்ளத் தெளிவாக விளக்கிக் கூறினார்.
நாட்டுப்பற்றில் தாங்களே முதன்மையானவர்கள் என்று கூறும் பாரதீய ஜனதா அதற்கேற்ற முறையில் ஒற்றுமையைப் பேண முன்வர வேண்டும். உலக நடப்புகளை ஊன்றிப் பார்த்து தன்னை சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
தமிழைக் காத்து நிற்கும் திராவிட பண்பாடு! காசி தமிழ் சங்கமம் உணர்த்தும் உண்மை!