தேசிய அளவில் முக்கியமான இரு கூட்டணிகளின் கூட்டம் இன்று (ஜுலை 18) நடைபெறுகிறது.
ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த மாதம் பிகார் தலைநகர் பாட்னாவில் கூடிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட கூட்டம் இன்று (ஜூலை 18) பெங்களூருவில் கூடுகிறது.
இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், திருணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து தேஜகூ கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள்?
இதேநாளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டமும் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் அசோகா ஹோட்டலில் கூடுகிறது.
தேசிய ஜனநாயக் கூட்டணிக் கூட்டத்தில் மொத்தம் 38 கட்சிகள் பங்கேற்பதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
மேலும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே, பிகாரில் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், ஜித்தன் ராம் மஞ்சி மற்றும் வட கிழக்கு மாநில கூட்டணிக் கட்சிகளான NPP (தேசிய மக்கள் கட்சி மேகாலயா), NDPP (தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி), SKM (சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா), MNF (மிசோ தேசிய முன்னணி), ITFT (திரிபுரா), ஆகியவை அடங்கும். பிபிபி (போடோ மக்கள் கட்சி) மற்றும் ஏஜிபி (அசோம் கண பரிஷத்) ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
ஆந்திராவில் இருந்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, கேரளாவில் இருந்து கேரள காங்கிரஸ் தாமஸ் பிரிவு ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்கின்றன.
சந்திரபாபு நாயுடு பங்கேற்பா?
ஆந்திராவில் இருந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பஞ்சாப்பில் அகாலி தளம் ஆகியவை இக்க்கூட்டத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அழைப்பில்லை என்று தெரிகிறது.
சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய நிலையில் திங்கள் மாலை வரை சந்திரபாபு நாயுடுக்கு தேஜகூ கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கொம்மரெட்டி பட்டாபி, “பாஜக தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. நாங்கள் அதை எதிர்பார்க்கவும் இல்லை” என்று தெரிவித்தார்.
ஆந்திராவை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கும் தேஜகூ கூட்டத்துக்கு அழைப்பு இல்லை.
நேற்று “பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சிகளான அகாலிதளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா?” என்ற கேள்விக்கு பதிலளித்த ஜே.பி. நட்டா, “அதை அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பா.ஜ., அவர்களை போகச் சொன்னதில்லை” என்றார்.
கர்நாடாகாவில் இருந்து குமாரசாமி இக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை.
ஆக தேசிய ஜனநாயக் கூட்டணியை பழையபடி வலிமைப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைமையின் முயற்சியில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாமல்… ஆங்காங்கே உடைந்து போன கட்சிகளையும், புதிய கட்சிகளையும் கொண்டே இந்த கூட்டணிக் கூட்டம் நடக்க இருக்கிறது.
-வேந்தன்
பாஜக கூட்டணியின் 37 வது கட்சி அமலாக்கத்துறை: டிகேஎஸ் இளங்கோவன் தாக்கு!
அமைச்சர் பொன்முடி இல்லாமல் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!