அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று (ஜூன் 14) அதிகாலை அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது நெஞ்சுவலி காரணமாக அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள வீடியோவில், “அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை இன்று விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டதாக நாடகமாடியிருக்கிறார். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் இதுபோன்று நாடகத்தை அரங்கேற்றுவது நல்லதல்ல.
அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் வருமான வரித்துறை சோதனையில் இருக்கும் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று துரைமுருகனிடம் கடிதம் கொடுத்து ஆளுநரை சந்திக்க வைத்ததை முதல்வர் ஸ்டாலின் மறந்துவிட்டாரா.
கனிமொழி, ஆ.ராசா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது இவ்வளவு பெரிய நிகழ்வுகள் நடக்கவில்லை. ஆனால் அதிகாலையில் 3 மணிக்கு செந்தில் பாலாஜி பெரிய நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். ஒரு மிகப்பெரிய ஊழலை திமுக அரசு மறைக்க பார்க்கிறது. ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மருத்துவமனையில் நாடகமாடலாம். ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும். அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவரது கடமை. செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்