நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ் 2 மாணவர் சின்னத்துரை வெட்டப்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திர செல்வி ஆகியோர் சக மாணவர்களால் வெட்டப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி மாணவர் சின்னத்துரையிடம் திருமாவளவன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார்.
அப்போது பேசிய திருமாவளவன், “சின்னதுரை, தைரியமா இரு…பயப்படாத…உனக்கு ஒன்னும் ஆகாது…நல்லா படிக்கனும்…நாங்களாம் இருக்கோம்” என்று கூறிவிட்டு
சின்னத்துரை அம்மாவிடம், “நான் நேர்ல வந்து உங்கள பாக்குறேன்…” என்றார். அப்போது அவர் “எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…”என்று திருமாவளவனிடம் கோரிக்கை வைத்தார்.
ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர் இந்திரா தேவி திருமாவளவனிடம் பேசும்போது, “அண்ணன் எங்களுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. எங்களுக்காக பேசுறதுக்காக யாரும் இல்லை. நாங்குநேரி நம்ம மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக இருக்கு. இவ்வளவு நாள் நாங்க வாய மூடிட்டு இருந்தோம். தயவு செஞ்சு வாங்கன்னேன். எங்களுக்கு எவ்வளவு பிரச்னை இருக்குனு விசாரிங்க.
நாங்குனேரி ஊரை சுத்தி 6 ஊரு இருந்துச்சு. அவ்வளவும் அத்திப்பட்டி மாரி காணாம போயிருச்சு. இன்னைக்கு வரைக்கும் அதை யாருமே கேக்கல. நாங்க பிச்சை எடுத்தாவது எங்க குழந்தைய படிக்க வச்சிருவோம். படிப்புக்கே பிரச்சனைங்கும்போது குழந்தைங்க பயந்து போயிருக்காங்க. பெரியவங்க வாய திறக்குறக்கு மறுக்குறாங்க… யாரும் இத பத்தி பேச மாட்டுக்காங்க” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்தநிலையில் சின்னத்துரை தாக்கப்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி திருநெல்வேலியில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
”உயிரைக்குடிக்கும் நீட்… தமிழ்நாடல்ல இந்தியாவுக்கே இதே நிலை தான்”- அன்புமணி
வழக்கு ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி மனுத்தாக்கல்!