கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாட மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற நடிகை நமிதாவிடம், நீங்கள் இந்து என்பதை நிரூபிக்க உங்களிடம் சான்றிதழ் இருக்கிறதா என்று கோயில் அதிகாரி ஒருவர் கேட்டுள்ளார்.
நடிகை நமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 26) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ சேகர் பாபு ஜீ வணக்கம். இன்று காலை நானும் மற்றும் பல கிருஷ்ண பக்தர்களும் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாட மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றோம். அங்கு எனக்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.
நான் இன்றுவரை பல கோயில்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் இன்றைக்கு எனக்கு நடந்த சம்பவம் மாதிரி எனக்கு வேறு எந்த கோயிலிலும் நடந்ததில்லை.
மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரியும் கோயில் அதிகாரி உத்தரா, என்னிடமும் எனது கணவனிடமும் நீங்கள் இந்து என்றால் அதற்கு சான்றிதழ் காண்பியுங்கள், என்ன சாதி என்பதற்குச் சான்றிதழ் காண்பியுங்கள் என்று மிகவும் காட்டமாகக் கேட்டார்.
என்னிடம் இப்படி யாரும் கேட்டதில்லை. நான் இந்துவாகத்தான் பிறந்தேன், எனது கல்யாணம், திருப்பதியில் இருக்கும் ‘இஸ்கான்’ நிறுவனத்தில் தான் நடந்தது என்பது இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். எனது குழந்தைகளுக்குக் கூட கிருஷ்ண கடவுளின் பெயரைத்தான் வைத்துள்ளேன்.
என்னை மாதிரி பிரபலத்திடமோ அல்லது ஒரு சாதாரண நபரிடமோ எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அந்த அதிகாரிக்குத் தெரியவில்லை. அதனால் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் “கோயிலில் உள்ள தெப்பக்குளத்தை தாண்டி செல்வதற்கு இந்துக்கள் அல்லாத நபர்களுக்கு அனுமதி இல்லை.
அதனால் முக்கியமான பிரபலங்கள் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த நபர்களிடம் கோயிலுக்கு வரும் போது அவர்களிடம் அவர்கள் இந்துவா என்று விசாரிப்பது வழக்கமான நடைமுறை.
அதனால் தான் நமிதாவிடமும் “நீங்கள் இந்துவா? என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்த பின்பு, அவருக்கும் அவரது கணவருக்கும் விஐபி தரிசனம் வழங்கினோம்.”என்று விளக்கம் அளித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை பேச்சு : கங்கனாவுக்கு பாஜக தலைவர் கண்டனம்!
“நகைச்சுவையை பகைசுவையாக்காதீங்க” :ரஜினியின் பதில் – துரைமுருகன் விளக்கம்!
ரசிகர் கொலை… நடிகர் தர்ஷன் சிறையில் ஜாலியோ ஜிம்கானா! – 7 பேர் சஸ்பெண்ட்!