தகைசால் விருதுடன் வழங்கப்பட்ட பரிசுப்பணமான ரூ. 10 லட்சத்துடன் தனது நிதியாக ஐந்தாயிரம் ரூபாயை கூடுதலாக சேர்த்து முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார் மூத்த தலைவர் நல்லகண்ணு
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் அரசு சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்படும்.
அந்த வகையில், கடந்த ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொண்டாற்றிய மூத்த தலைவர்களைக் கௌரவிக்கும் விதமாக தகைசால் தமிழர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவித்தது தமிழக அரசு.
அதன்படி இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அறிவிக்கப்பட்டது.
இன்று(ஆகஸ்ட் 15)கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகைசால் விருதுக்கான சான்றிதழையும் பரிசுத்தொகையாக ரூ.10 லட்சத்தையும் நல்லகண்ணுவுக்கு வழங்கினார்.
அப்போது தனது பணம் ரூ. 5 ஆயிரத்துடன் சேர்த்து அரசு வழங்கிய ரூ. 10 லட்சத்தையும் முதல்வர் நிவாரண நிதிக்கே திருப்பி வழங்கினார் நல்லகண்ணு.
தமிழ்நாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக விளங்கும் நல்லகண்ணுவுக்கு வயது 96. 1925-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த இவர் தன்னுடைய 18 வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் நல்லகண்ணு. 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தலைவராகவும், 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயலாளராகவும் பணியாற்றியவர்.
கலை.ரா
கூட்டணிக் கட்சிகளால்தான் முதல்வர் ஆனேன்!- ஸ்டாலின்