முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்வதாக நேற்று (நவம்பர் 11) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று (நவம்பர் 12) நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான பிறகு நளினி இன்று (நவம்பர் 12) மாலை செய்தியாளர்களிடம் பேசினார். அவர், “32 வருடம் சென்றுவிட்டது. இனிமேல் என்ன சந்தோஷம் இருக்கும் என்று தெரியவில்லை.
ஆனால் என்னுடைய வழக்கறிஞர்கள் மற்றும் உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி. என் வழக்கை வாதாடுவதற்காக நான் எந்த வழக்கறிஞருக்கும் பணம் கொடுத்தது கிடையாது.
வாழ்க்கையை வாழவேண்டிய தருணம்
நான் விடுதலையானதற்கு என் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். 32 வருடம் என்னைப் பிரிந்திருந்த என் மகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.
’அம்மா நீ உன் வாழ்க்கையை வாழ வேண்டிய தருணம் இது’ என்று என்னிடம் என் மகள் சொன்னாள். நான் செய்யாத தவற்றுக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தது.
திருப்தியாக இல்லையா?
ஆளுநர் காவல் துறையில் இருந்தவர். ராஜீவ் காந்தி மரணமடைந்த போது காவல்துறையைச் சேர்ந்த 7 பேர் இறந்து விட்டனர். அப்படி இருக்கும் போது அவர் எப்படி எனக்கு விடுதலை கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியும்.
எங்களை விடுதலை செய்யக்கூடாது என்று பலரும் சொல்கின்றார்கள். ஆனால் நாங்கள் 32 வருடம் சிறையில் இருந்துவிட்டோம். அது அவர்களுக்குத் திருப்தியாக இல்லையா?
சிறைச்சாலையை நரகம், சாக்கடை, புதைகுழி, சுடுகாடு என்று தான் நான் நினைத்தேன். உடுத்திக் கொள்ளச் சரியான ஆடை கூட இருக்காது. மற்றவர்கள் பயன்படுத்திய உடைகளை எல்லாம் பயன்படுத்தியுள்ளேன்.
ஆனால், சிறைச்சாலை ஒரு பெரிய பல்கலைக்கழகம். அங்கு நாம் அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியும்.
எனக்கு பயமில்லை
இந்த வழக்கை எந்த காரணத்திலும் விட்டுவிடக்கூடாது என்று போராடினோம்.
இந்த வழக்கை இன்னும் சிபிஐ விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இது குறித்த பயம் எதுவும் என் மனதில் கிடையாது. அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளட்டும். நான் யாரென்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
தமிழ்நாட்டு மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இனி பொதுவாழ்கையில் ஈடுபடும் எண்ணம் கிடையாது. என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன்” என்றார்.
இதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நளினியின் சகோதரர் பாக்கியநாதன், “நளினியும் சரி எங்கள் குடும்பத்தினரும் சரி நிறையவே மகிழ்ச்சியாக உள்ளோம். அவர் இனிமேல் குடும்பத்துடன் சாதாரண ஒரு வாழ்க்கை வாழப் போகிறார்.
முதல்வரிடம் நேரில் நன்றி தெரிவிக்க அவரிடம் நேரம் கேட்க முயன்று வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
மகாராஷ்டிரா: ஏக்நாத் அணிக்கு தாவிய உத்தவ் ஆதரவு எம்.பி.!
10%க்கு ஒரு நீதி… 10.5%க்கு ஒரு நீதியா? இயக்குனர் வ.கௌதமன் கேள்வி!