எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே அதிமுகவுடன் கூட்டணி அமைந்துவிடும் என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜனவரி 23) தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், “பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி உறவினர் வீடுகளில் ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கப்படுகிறதா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “கூட்டணி குறித்து அண்ணன் எடப்பாடியிடம் நாங்கள் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். ரெய்டுக்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை. அவரது உறவினர் வீட்டில் மட்டும் ரெய்டு நடக்கவில்லையே, திமுக தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது.
இந்தநிலையில், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் “பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமையுமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “உங்களது கேள்வி இல்லாத ஊருக்கு வழி கேட்பது போன்று உள்ளது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில், எடப்பாடியிடம் பேசினாலே அதிமுகவுடன் கூட்டணி அமைந்துவிடும் என்று நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.