ராஜினாமா… அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்

அரசியல்

சென்னை அமைந்தகரையில் நேற்று (மார்ச் 17) தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போய்விடுவேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த தகவலை மின்னம்பலம் முதன்முதலாக நேற்று வெளியிட்டது. இதையடுத்து அண்ணாமலையின் அவரது கருத்து தமிழக அரசியலில் மிக முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்தநிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகுவேன் என்று அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் இன்று (மார்ச் 18) செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் பதவி விலகுவேன் என்று அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து” என்றார்.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இதுவரையிலும் தமிழகத்தை பொறுத்தவரை எந்த அரசியல் கட்சிகளும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதில்லை. யாராவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுகின்றனர். பாஜக திமுகவுடனும் அதிமுகவுடனும் இதற்கு முன்பு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. பாஜவை பொறுத்தவரை எங்களுடைய அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி தான் எங்களுடைய முடிவு இருக்கும்” என்று தெரிவித்தார்.

நான் தேசிய கட்சியின் மாநில மேனேஜர் அல்ல என்று அண்ணாமலை தொடர்ந்து சொல்லி வரும் நிலையில்…நயினார் நாகேந்திரனோ, “அகில இந்திய தலைமை சொல்வதன்படி தான் எங்கள் முடிவு இருக்கும்” என்று அண்ணாமலைக்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

செல்வம்

5 நாட்களுக்கு மழை: வானிலை நிலவரம்!

“பிக் பாக்கெட் அடிக்கிறார் எடப்பாடி”: பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ்

+1
0
+1
4
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *